வேலை தேடி அலைபவன்

வேலை தேடி அலைபவன்
பதற்றத்திற்கு அருகாமையில்
நிற்பவனாக இருக்கிறான்.
அவனது ஏக்கங்கள்
அவனுக்கும், அவனது நாற்காலிக்கும்
இடையிலான தூரத்தைக் குறைக்கும்
பிரார்த்தனையாய் இருக்கிறது.
குற்ற உணர்ச்சியால் நிரம்பிய
அவனது வெளி
கைப்பிடியற்ற சூடான
தேனீர்க் கோப்பையைப் பற்றுவது போல்
துயரமானது.
அறியப்படாத அணுவாய்
பூமியிலிருந்து விலகிவிட
அவன் வயதினைப் பிரார்த்திக்கிறான்.
அதிர்ஷ்டத்தின் வழிகளில்
விழியை நிறுத்தியபடி
தரையிறங்காத தேவதைகளுக்காக
இறகுகளைக் கனவில் சேகரிக்கிறான்.
அவனது பகல் பொழுதுகள்
கடக்க முடியாதவை.
இரவுப் பொழுதுகளோ
தொலைக்க முடியாதவை.
பாலையின் பாடலை
முணு முணுத்தபடி
கடந்தேகும் அவனிடம்
இன்று நான் வாசித்தேன்....

இரையின்றித் திரும்பும்
ஒரு எறும்பின் சோர்வான நடையை.

எழுதியவர் : rameshalam (14-Jun-16, 10:52 am)
பார்வை : 66

மேலே