ஸ்பரிசங்கள்

எச்சில் தெறிக்க முத்தி
கழுத்தைக் கட்டிக் கொள்ள
அவள்
அக்குள் நறுமணத்தில்
சீலை வாசனையில்
மடி கிடத்தி
கருவறை நுகர்ந்து
குதூகலிக்கும்
என் குழந்தைமை!

அவள் ஸ்பரிசிக்கும்
உறுப்புகளிலெல்லாம்
ஜீவனின் பரிசுத்தமானது
குருதி பீறிட்டு
தழும்புமோ!

காற்று நிரப்பிய
பலூன் பறத்தும்
ஒட்டு மொத்தமான
தொடுகை
காற்றுக்கும் காற்றுக்குமானதாய்!

வேறொன்றாய்
இன்னொரு ஆளாய்
என்னை நானே
தொடுகையில்
நிசப்தித்து
நான் நான் என்றேன்
ஆமாம்! நீ நீ என்றது!

முலையுண்ண
நான் ஸ்பரிசிக்கும்
காம்பு நிறைப்பது
ஆதியான மெய்மையில்
அம்மை பொழிய
நித்தியமான என் பசி!

உடைந்து கிடக்கும்
இரவுகளெல்லாம்
ஸ்பரிசங்களின் நரம்புகளை
மீட்டிக்கொள்ளுதலில்
மீள முடியா ராகம்
உந்தி
ரகசியமாய்
நம் ரகசியங்கள்!

எழுதியவர் : நந்தகுமார் (17-Jun-16, 2:03 pm)
Tanglish : sparisangal
பார்வை : 101

மேலே