ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நின் பாதம் சரணடைய
யாதொரு வழியென்று
நித்தம் சிந்தித்து
சித்தம் தெளிந்திங்கு
கற்ற மந்திரம்
ஓம் நமசிவாய
போற்றி புகழ்ந்து
யாவும் நீ என்று
விதி வழி செல்வோற்கு
நல்வழி அருளும்
ஒரு அருள் விழி கண்டு
ஆனந்தம் கொண்டிங்கு
அனுதினம் துதிக்கும்
மெய் திருநாமம்
ஓம் நமசிவாய
செஞ்சடை மேலே
புனித நீருடையாள் தான் இருக்க
உடுக்கையொடு வேல் ஒன்று
ஒரு கரத்தை பற்றி நிற்க
சிவ தாண்டவம் தனை கண்டு
உள்ளமெல்லாம் மெய் சிலிர்க்க
காணும் இடங்களெல்லாம்
ஓம் நமசிவாய
இருகண் போதாதென
நெற்றிக்கண் கொண்டு
உலகம் யாவிற்கும்
ஞான ஒளி தந்து
கரு தொடங்கி
எறு வரைக்கும்
காத்தருளும் பேரொளியை
காண்கின்ற பொழுதெல்லாம்
மெய்யாற மெய் கூறும்
ஓம் நமசிவாய
மேனி எனும் பாத்திரத்தை
ஏந்தி வந்து யாம் பிட்சை கேட்க
அருள் வருமோ ?
புகழ் வருமோ ?
பேறு வருமோ ?
செல்வம் வருமோ ?
நோய் வருமோ ?
வறுமை வருமோ ?
வாராதெல்லாம் எமக்கானதல்ல
என்று ஒப்புகொண்டு ஏற்றுகொள்ளும்
ஞானம் வருமோ ?
எவை வரும் என்பதும்
எவை நேரும் என்பதும்
உன் திருகரத்தில் ஒளிந்திருக்க
தீப ஓளியில்
திருமுகம் காட்டும்
எம்பெருமான் சிவமே
ஓம் நமசிவாய
எங்கும் நீ என்று
நிலைத்திருந்தும் எம்மனமோ
ஆலைய கருவறையில்
அலைபாயும் மனத்தோடு
நிலை என்று எதுவுமில்லை
இது பொய் என்ற நினைவோடு
அவை வேண்டும்
இவை வேண்டும்
இன்னும் எவை எவையோ
வேண்டும் வேண்டும் என
நெஞ்சுருகி வேண்டுகையில்
சிவமே என்று
உன் திருமேனி தினம் கண்டு
நந்தி எனும் பெயர்கொண்டு
நிலைதிருப்பதை பார்க்கையில்
எம் தவறை யாம் உணர்தோம்
ஓம் நமசிவாய
அம்மைக்கு சரிபாதி
அளந்திங்கு நீ தந்து
அர்த்த நாரியென
ஆனந்த நடனமிட
உந்தன் திருமேனியின் இடபுறமும்
தாயின் திருமேனியின் வலபுறமும்
என்று காண்பேன் என்று
ஏக்கத்தோடு நிற்கையில்
யாதுமாகி எமைகாக்க
எம்முடனே துணைநிற்க
மறைந்திருந்து அருபுரியும்
சரிபாதிகளின் மீதிகளை
மனதார நினைத்து
நீயே கதி என்று
நிற்கும் படி எனை படைத்து
இன்றுவரை காக்கும்
எம் சிவமே
என்றும் துதி பாடி
எம் கடன் தீர்ந்தபின்
உடலெனும் குப்பை தனை
பூவுலகில் எடுத்தெறிந்து
நான் என்னும்
நாமம் இல்லாமல்
இரண்டற கலந்து
உன் பாதத்தை
பற்றி வாழும் நாள் வரையில்
இம்மனித போர்வையை
தீ வந்து தீண்டும் வரை
காத்தருள்வாய் எம் சிவமே
ஓம் நமசிவாய