கவிதை மகள்-என் அன்னை

கவிதை மகள்-என் அன்னை

இளங் காலைப் பனி நீரில்
ஈரம் உலராத பொழுதினில்
கால் எடுத்து வைத்தாள்
கவின்மிகு கவிதை மகள்

என்னை உறங்கச் செய்ய
அவள் பின்னிய பாவினில்
ஊறும் கன்னல் சுவையில்
மொளனங்கள் மகுடி ஊதும்

அவள் மெல்லச் சிரிப்பாளா
அல்லது விம்மி அழுவாளா
என் அழுகையை நிறுத்திட
அவள் பாடும் போதெலாம்

மனித உருவில் வந்த
கவிதை தேவதை தனது
யாழின்றி கண நேரம் எனக்கு
வாழ்வளிக்க வந்தவள்.

அவளது இதயம் படபடப்பது
அருகில் எனக்குக் கேட்கும்
சூரியனின் இளங்சூடு என்
உடல்வழி தகிப்பது ரசித்து

என் கையைக் காலைப்
பிடித்து முத்தம் இட்டு
உச்சி முகர்ந்து நிற்பாள்.

என் பிஞ்சு விரல்கள்
அவளது முகம் தொட்டன
கொஞ்சும் முன் மயிரினை
பிடித்து இழுத்தனவோ.

என் அன்னை அவள்
அழகில் சிறந்தவள் என்று
அன்புக் கண்களைக் காண
என் கண்கள் கூசின.

அவள் பாடிய பாடல்
என் பயம் போக்கியது
காணாத தேசத்துக் கனவாய்
கவிதை வரிகள் பேசின..

காதோரம் நரை வந்தாலும்
பத்திரமாய் அதைக் காப்பேன்
சாதாரண வார்த்தைகள் இல்லை
சடுதியில் மறந்து போக.

இரவும் பகலும் அமைதியில்
இறைந்து அடங்கிக் கிடக்கும்
காற்று இல்லாத அலைப்
பெருக்கும் இல்லாத பெருங்
கடலைப் போன்றது இன்று
அவள் சென்று விட்ட இடம்.

இளங் காலைப் பனி நீரில்
ஈரம் உலராத பொழுதினில்
காற்றில் மிதந்து வரும்
தாலாட்டில் அவள் இருப்பாள்

ஜே.ஜே..

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (24-Jun-16, 2:45 pm)
பார்வை : 85

மேலே