சிந்தையின் சிதறல்கள்

வாழ்வெனும் புத்தகத்தின்
வண்ணமிகு பக்கங்கள்
மகிழ்ந்திடும் தருணங்கள் !

வசந்தமெனும் தோட்டத்தின்
மணம்வீசும் மலர்கள்
அன்புமிகு நெஞ்சங்கள் !

வாஞ்சைமிகு வருடலின்
விளிம்பற்ற உணர்வுகள்
அன்பின் எல்லைகள் !

குளிர்ந்திட்ட சிந்தையின்
குறுகியநேர சிலிர்ப்புகள்
இதயத்தின் இன்பநொடிகள் !

சீறியெழும் உள்ளத்தின்
சிவந்திடும் நேரங்கள்
பொங்கிடும் கோபங்கள் !

வீரம்நிறைந்த நெஞ்சத்தின்
விம்மியழும் பொழுதுகள்
விரும்பாத நிகழ்வுகள் !

பாசமிகு உள்ளத்தின்
பண்புமிகு காட்சிகள்
பரிவான நேரங்கள் !

நற்குண சிந்தையின்
நறுமண உணர்வுகள்
நன்றியுள்ள செயல்கள் !

பேராசை உள்ளத்தின்
பேராபத்து நேரங்கள்
பதவிவெறி துடிப்புகள் !

இரக்கமிகு நெஞ்சத்தின்
இன்பமிகு தருணங்கள்
இல்லார்க்கு உதவுதல் !

நேர்மைமிகு நெஞ்சத்தின்
நேரலைக் காட்சிகள்
ஊழலற்ற பணிகள் !

வாழ்க்கைப் பயணத்தின்
வருந்திடும் நேரங்கள்
இருப்போர் இறத்தல் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Jun-16, 3:34 pm)
பார்வை : 779

மேலே