ஒரு காதல் பாடல்

அழகழகாய் அழுவதற்கு தூரிகைக்கு விழியை கொடு
ஓவியமாய் மலர்வதற்கு காகிதமாய் மனதை கொடு
காகிதமே மறுத்து விட்டால் ஓவியத்தை வரைவதெங்கே
தூரிகையின் கவலைக்கிங்கு காகிதமே மருந்து கொடு (அழகழகாய் )
வானத்திலே முகிலங்கள் ஓவியங்கள் வரைகிறதே
வானவில்லும் சிலநேரம் அதில் வாழ்ந்துவிட்டுப் போகிறதே
ஓவியத்தில் வானவில்லாய்
ஒரு பொழுது வாழ்ந்திருக்க உயிர்கிடந்து துடிக்கிறதே
மேகம் பொழிந்து ஓய்ந்த பின்னே
வானம் மறைந்து போய்விடுமோ
வானம் மறைந்து போய் விடிலோ நிலவு எங்கு உதித்திடுமோ
(அழகழகாய் )
கரைகளிலே அலைவந்து விளையாடி மகிழ்கிறதே
நுரைகளுமே கரையிடத்தில் சில நொடிநேரம் கிடக்கிறதே
கரைகளிலே நுரைபோல
சில நொடிகள் நானிருக்க கரையாகக் கூடாதோ
மீன்கள் அறியும் கடலின் ஆழம்
யார்தான் அறிவார் மனதின் ஆழம்
கரையில் விழுந்தே தவிக்கும் மீனாய் காதல் கிடந்தது தவிக்கிறதே (அழகழகாய் )
*மெய்யன் நடராஜ்