பிரதோஷத் துதி

நேரிசை வெண்பாக்கள்

கங்கைத் தலையனே கங்கா தரனே!வெண்
சங்குக் குழையனே ! சங்கரனே ! - மங்கை
உடலனே ! கண்ட விடலனே ! வாவா
உடனெமக்கு வந்திங் குதவு !

அரவுக் கழுத்தனே ! அம்புலி தன்னைத்
தரித்த சடையனே ! தண்ணென் - றிருக்கின்ற
கையிலை வாழும் ஒயிலாள் கணவனே !
மையிலைக் கோவே மகிழ் !

பஞ்சாட் சரமுடை அஞ்சாக் கடவுளே !
எஞ்சாண் வுடலை எடுத்தருள்வாய் ! - விஞ்சா
அமுதனே ! ஈசா ! தமிழனே ! நேசா !
கமழ்நீறு நெற்றியிட்டோம் காண் !

நந்திக் கரசனே ! தொந்திக் கடவுளின்
தந்தையே ! தாயே ! தயாபரா ! - கந்தனைப்
பெற்ற சடையனே ! நெற்றி விழியனே
இற்றைக் கருளை இசை !

பிரதோஷ மிந்நாள் பிறதோஷம் மாயச்
சரணத்தின் கோஷம் செபித்தோம் ! - அரனே !
ஒன்றா யிரண்டா யொழுங்கிசைக்க லாற்றோமே !
கன்றாய் எமைநினைத்துக் கா !

-விவேக்பாரதி
02/07/2016

எழுதியவர் : விவேக்பாரதி (2-Jul-16, 1:32 pm)
பார்வை : 113

மேலே