ஒரு கடிதம் எழுதினேன் அதில் உயிரை அனுப்பினேன்

ஒரு கடிதம் எழுதினேன் அதில் உயிரை அனுப்பினேன்
==================================================

ஒரு தனிமை வாசகியின் விட்டக்குறை தொட்டக்குறை நான்.

சேராத கடிதமும் கழியாத ஊடலும் இழுபறிதான் ம்ம்
தசையின் நார் பிரித்து உன் அங்கத்தாள் பூராவும்
சித்திரத்தைய்யல் தொடுக்கிறேன். உனக்கேனோ பிடிப்பதாய் இல்லை.

கன்னிமாரின் கதை கேட்கும் மீராவின் காதலுக்குக் கூட
வாயும் வயிறும் வேறுதான் போல.

வாசிக்காத மொழிகளை தேடிப்போகிறவளுக்கென
பேசாத சொற்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.

உருக்களின் ஒவ்வொரு விதையாய் ஊர்ந்து ஊர்ந்து
ஹைப்ரிட் செய்கிறேன். அங்கெல்லாமும் கூட
கண்கள் கண்களாக பேசி காற்றிடம் சிரித்தும் அவள்தான் இருக்கிறாள்.

முத்தவாடையும் ரத்தவாடையும் வேறடா என்கின்றவளுக்கு
என் முத்தத்தின் ஒவ்வாமை போல உமட்டிக் கொண்டிருக்கிறாள்.

என் உயிர் அடைத்த புகைக்கூண்டு வர்ணஜாலம் நீ
ஆளுகை ஊசிகளில் தொட்டுரசி விளையாடும்
அசட்டை தைரியம் உனக்குள் எப்போது நேர்ந்தது ம்ம்

மேகத்திற்கப்பால் ஒளிந்துவிட்டு ஒளிரும்
கதிரழகுபோல் தூரமாகிப்போனாய்.

உனக்குள் இருக்கும் என் காற்றுத்தொலைத்து
யாதுமற்றவளாகி திசைப்பிறழ்ந்து விடாதே
மனித விரல்களுக்கு மீள்ம உறை கையாளும் ரசவாதம்
இன்னமும் என்போல பக்குவப்படவில்லை

என் எச்சில் சுடு ஆவியால் பொங்கி பறக்கும்
உன் பொறுத்தவரை, என் வழக்குரை தீராப் பொறாமைதான்.

இந்த பொல்லாப்புத் தீர வழி செய்யாமல் தான்
ஒரு அறைக்குள்ளேயே நல்லிரவு
சொல்லிக் கொள்ளாமலும் ஊமையாகிப் போகினோம்..

உன் கனவுகளில் என் கைகள் உபத்திரவிப்பதில்லை
என்பதால்தானோ என்னவோ உன்பிரிவின் வழி
தெளிவடைந்துவிட்டதுபோல் ம்ம்

ஒளிப் பிரியாத சலபங்கள் போல நீ தூவிப்போன
ஒளி சுற்றியே ஆக்கை கரைகிறேன்.

பருத்திப்பூ தொகைந்த செம்புழுதி ஆடை தரித்தவளின்
பீய்த் தெறிந்த மல்லிகைப் பின்னல் கட்டு வழிதேடி
காடு முளைக்கிறது நம் காதல்

பேன் கொன்று நரைதேடி நாற்றம் உடுத்தி நுதலூகி
நாசி ஊகி உதடுப்பற்ற துடுப்பற்று மழைத்துளி ஏந்தும்
உன் நாவின் உச்சிநுனி ஊகி வழுக்கினேன்.

மார்புப் பள்ளத்தாக்குகள், கொப்புள், அல்குல் நழுவி
இடைச்சேலை சொருகல் பற்றியபோது
இடைஞ்சல் கொடுத்த புழுவாக எனை குடைந்தெறிந்து விட்டாய்

குப்புறவிழுந்து எழும் முன்னமே இரையாகிக்
கறையாகிப் போய்விட்டேன், திவலைகள் உதைத்து
பட்டாம் பூச்சி எழுப்பும் உன் காலடிக்குள் ம்ம்

நீ மறந்து நான் சுமந்த நம் காதல் உன் காலடி படும்தோறும்
ஊமத்தம் ஸ்பரிசிக்கிறது உணரவில்லையா ??

பாவம்,,, நாசி அடைப்புதான் உனக்கு பழக்கமாயிற்றே..


"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (4-Jul-16, 4:06 am)
பார்வை : 216

மேலே