கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் தளர்ந்து விடுவோம்
கொஞ்சம் மலர்ந்து விடுவோம்
கொஞ்சம் கிளர்ந்து எழுவோம்
கொஞ்சம் கரைந்து விடுவோம்
என்னாக போகிறது
இதுவரை எதுவும் ஆகவில்லையே
இனியாவது ஏதேனும் ஆகட்டும்
பிரம்மாண்டம் பார்த்ததுண்டா
நான் தாஜ்மஹாலையோ
ஈபிள் டவரையோ
பாபிலோன் தொங்கும் தோட்டத்தையோ
சொல்லவில்லை
காரணம் நீங்கள் இன்னும்
உங்கள் மனதுக்குள் செல்லவில்லை
அன்றாடம் கண்டு சலித்து
போனதா ஆம்
ஆதலால் தான் அந்த
நிலவு வெறும் கவிதைக்கு
அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது
ஓடி ஓடி கால்கள் வலிக்கிறதா
கொஞ்சம் தளர்ந்து விடுங்கள்
சிறுவயது கால்கள்
நினைவுக்கு வரும் வரை
கொஞ்சம் தளர்ந்திருங்கள்
வாடிய முகத்துடன் வேலை
என்ன செய்வது
கொஞ்சம் மலர்ந்திருங்கள்
ஒரு மலரின் ஆராவாரமற்ற
இதழ்விரிப்பு வரும் வரை
கொஞ்சம் மலர்ந்திருங்கள்
சோர்ந்து விடுகிறீர்கள்
உண்மைதான்
கொஞ்சம் கிளர்ந்து எழுங்கள்
ஒரு அழகியின் இதமான
வருடங்கள் வருகை தர
கொஞ்சம் கிளர்ந்து எழுங்கள்
வெறுத்து திரிகிறீர்களா
நடப்பது தான்
ஒரு தேநீர் கோப்பையோடு
அதிகாலை குளிர்ச்சியில்
கொஞ்சம் கரைந்து விடுங்கள்
என்னாக போகிறது
இதுவரை எதுவும் ஆகவில்லையே
இனியாவது ஏதேனும் ஆகட்டும்