முதல் முத்தம் வெண்டுறையில்

மொட்டு மலரும் காலை நேரம்
கட்டிய மனைவியின் பட்டு மேனியைத்
தொட்டுப் பார்க்க மனதில் ஆசை
எட்டிப் பார்த்தால் கட்டிய நாளில்
இல்லை அருகில் அவள்

முப்பத் தைந்து ஆண்டுகள் முன்பில்
காசி யாத்திரை செல்லும் வேளை
தந்தை வந்தெனை தடுத்து நிறுத்தி
தந்தேன் மகளை உனக்கே என்றே
கட்டு தாலி என்றார்

கொட்டும் மழையில் கையில் இருந்த
குடையை வீசி எறிந்த உடனே
கையில் பிடித்துக் கொடுத்ததும் அவளின்
பட்டுக் கரங்களை பற்றிக் கொண்டு
விரைந்திடும்முன் மணமேடை நோக்கி

அமர்த்தி இருவரை வூஞ்சல் மீதில்
பாலும் பழமும் உறவினர் தரவே
வாழ்த்திய பெற்றோர் பெரியவர் கூடி
வேல்விழி மங்கை விடுக்க வெட்கம்
விரிந்தன இதழ்கள் இரண்டு

அக்னி சாட்சியாய் அவளை ஏற்று
கழுத்தில் தாலி கட்டிய உடனே
அக்னி சுற்றி ஏழு முறைகள்
வலம்வரு வேளை நெற்றியில் முத்தம்
பதிக்க எழுந்தது ஆசை

நானிரு அறைக்குள் பாதம் பதிக்க
பூட்டினர் அறையின் கதவை உறவினர்
காலிரு மெட்டி மென்னிசை எழுப்ப
காத்திரு மங்கை கால்கள் கடுக்க
கட்டில் மீதுவந் தமர்ந்தாள்

குமுதம் மலரும் இரவு நேரம்
அமுதம் கையில் ஏந்தி இருக்க
என்னிரு கண்கள் அவளை பார்த்தும்
ப்ருகு என்று ஒருமுறை கூட
சொல்ல வில்லை அவள்

முல்லை மலர்கள் நறுமணம் வீச
வில்போல் இமைகள் விரியக் கண்டு
கன்னம் மீதில் பதித்ததோர் முத்தம்
ஒருமுறை நினைத்துப் பார்த்தால் போதும்
இனிக்கும் மனதில் இன்றும்

எழுதியவர் : (5-Jul-16, 7:18 pm)
பார்வை : 196

மேலே