இனிய தமிழில் பிழையின்றி எழுத பாகம் -2

பாகம் - 2
தமிழ் மொழியில் பிழைகளைத் திருத்த மேலும் சில வழிகள்
வழங்குப்பவர் திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி – தமிழாசிரியை- கோவை 22. அலைப் பேசி எண் 98432 97197.

1. வாக்கியப் பிழைகளைத் திருத்த:
வாக்கியத்தின் உறுப்புகள்: எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் முதலியன.
குறிப்பு:
1. ஒரு வாக்கியத்தில் எழுவாய் முதலிலும். செயப்படுபொருள் இடையிலும் (நடுவிலும்), பயனிலை வாக்கியத்தின் இறுதியிலும் அமையும். (எ.டு) மணிவண்ணன் பந்து விளையாடினான்.) இதில்.
அ. மணிவண்ணன் - எழுவாய்.
ஆ. பந்து – செயப்படுபொருள்.
இ. விளையாடினான் – பயனிலை.
 ஒரு வாக்கியம் எந்த எழுவாயில் தொடங்குகின்றதோ அதே பயனிலையில் தான் நிறைவு பெற வேண்டும்.
 (எ.டு) ஆண்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் ஆண்பாலில் தான் முடிய வேண்டும். (கண்ணன் குழல் ஊதினான்.)
 பெண்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் பெண்பாலில் தான் முடிய வேண்டும். (வாணி வீணை வாசித்தாள்)
 பலர்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் பலர்பாலில் தான் முடிய வேண்டும். ( மாணவர்கள் பாடம் படித்தனர்)
 ஒன்றன்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் ஒன்றன்பாலில் தான் முடிய வேண்டும். (குதிரை வண்டி இழுத்தது)
 பலவின்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் பலவின்பாலில் தான் முடிய வேண்டும். (எலிகள் உணவுப் பொருள்களை வேட்டையாடின.)
மேற்கூறிய வழிகளை எளிதில் அறிந்துகொள்ள நமக்கு திணை. மற்றும் பால் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது,
திணை (ஒழுக்கம்)
திணையின் வகைகள்:
1. உயர்திணை: (உயர்வான ஒழுக்கங்களை உடைய, பகுத்தறியும் ஆற்றல் பெற்ற, மக்கள் , மற்றும் தேவர்களைப் பற்றிப் பேசுவது ஆகும்.
2. அஃறிணை: (பகுத்தறிவற்ற உயிருள்ள உயிரற்ற அனைத்துப் பொருள்களையும் குறிப்பது ஆகும்.)
3. உயர் திணைக்கு உரிய பால்கள்: ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியன் மட்டுமேயாகும்.
4. அஃறிணைக்குரிய பால்கள்: ஒன்றன்பால் மற்றும் பலவின் பால் ஆகியன்.
மேற்குறிப்பிட்டவற்றுள் –
ஒரு பாலுக்கு வரவேண்டிய ஒரு சொல் பிரிதொரு பாலுக்கு வந்தால் அஃது பால்வழு (வழு-குற்றம்/தவறு) எனப்படும்.
சான்றாக: (முருகன் பாடல் பாடினாள்) – இதில் முருகன் என்பது ஆண்பால். ஆனால் பாடினாள் என்பது பெண்பால். எனவே இஃது பால்வழு எனப்படும்.
ஒரு திணைக்கு வரவேண்டிய ஒரு சொல் பிரிதொரு திணைக்கு வந்தால் அஃது திணைவழு (வழு-குற்றம்/தவறு) எனப்படும்.
சான்றாக: (மாணவர்கள் விளையாடின.)
இதில் மாணவர்கள் என்பது உயர் திணை. விளையாடின என்பது அஃறிணை. என்வே இஃது திணைவழு எனப்படும்.
-----------------------------------------

II அடுத்து இடம் எவ்வாறு அமைய வேண்டும், எவ்வாறு அமைதல் கூடாது என்பதனைக் காண்போம்.
இடம்: இடம் என்றால் ஒருவர் தன்னைப் பற்றியோ தனக்கு முன்பிருப்பவரைப் பற்றியோ அன்றி பிரிதொருவரைப் பற்றியோ பேசுவதாகும்.
வகைகள்: இடம் மூன்று வகைப்படும்.
அவை.
1. தன்மை: அதாவது ஒருவர் தன்னைப் பற்றி மட்டும் பேசுவது தன்மையிடமாகும். (எ.டு) நான் படித்தேன். இதில் உள்ள நான் என்பது தன்மையிடமாகும்.
2. முன்னிலை : ஒருவர் தனக்கு முன்பாக இருந்து கேட்பவரைப் பற்றிப் பேசுவது முன்னிலை இடம். (எ.டு) நீ வரைந்தாய். இதில் உள்ள நீ முன்னிலை இடமாகும்.
3. படர்க்கை: ஒருவர் தன்னையும், தனக்கு முன்பிருப்பவரையும் பற்றிப் பேசாமல் பிரிதொருவரைப் பற்றிப் பேசுவது படர்க்கை இடம் ஆகும். (எ.டு) அவன் படிக்கின்றான். இதில் அவன் என்பது படர்க்கை இடம் ஆகும்
மேற் கூறியவற்றில் உள்ளவாறு அமையாமல்.
1. அவன் வந்தாய்,
2. நீ படிக்கிறேன்.
3. நான் விளையாடுகிறான். என்றவாறெல்லாம் முறை மாறி எழுதுவது இடவழு எனப்படும்.
---------------------------------------------
III அடுத்ததாக நாம் காண்பது காலம் பற்றிய செய்திகள்:
காலம்: காலம் என்பது ஒரு செயல் நிகழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாகும்.
காலம் மூன்றுவகைப்படும். அவை,
1. இறந்தகாலம்: ஒரு செயல் நடைபெற்று முடிந்ததைக் காட்டுவது. (எ.டு) மணி விளையாடினான்.
2. நிகழ் காலம்: ஒரு செயல் நடைப்பெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுவது.
(எ.டு) கண்ணன் படித்துக்கொண்டிருக்கிறான்.

3. எதிர்க் காலம்: ஒரு செயல் நடைபெறப் போவதைக் குறிப்பது.
(எ.டு) மாணவர்கள் நாளை தேர்வு எழுதப்போகிறார்கள். இவ்வாறு எழுதுவதே முறையாகும்.

மேற்குறிப்பிட்டதற்குப் பதிலாக,
ஒரு காலத்தில் வரவேண்டிய சொல்லையோ பொருளையோ பிரிதொரு காலத்தில் மாற்றி எழுதுவது காலவழு என்ப்படும்.
(எ.டு) உமா நேற்று வருவாள். இவ்வாறு எழுதுவது காலவழு எனப்படும்.
-------------------------------
IV அடுத்து நாம் காண இருப்பது எண்:
எண் என்றால் எண்ணுதல்(நினைத்தல்) அல்லது எண்ணிக்கை.
என்பதாகும். இங்கு நாம் பார்க்க இருப்பது எண்ணிக்கை பற்றிய செய்திகள்.
எண் இரண்டுவகைப் படும். அவை ஒருமை, பன்மை என்பனவாகும்.
ஏதேனும் ஒருபொருளைக் குறித்து பேசுவது ஒருமை எனப்படும்.
ஒன்றிற்கு மேற்பட்ட பலவற்றைக் குறித்துப் பேசுவது பன்மை எனப்படும்.
(எ.டு) எங்கள் வீட்டில் ஒரு பூனை வளருகின்றது.
இவ்வாறு எழுவாய் ஒருமையில் துவங்கினால் பயனிலையும் ஒருமையில் தான் முடிய வேண்டும்.
இதில் ஒரு பூனை என்று எழுவாயில் ஒருமை வந்துள்ளமையால், பயனிலையில் வளருகின்றது. என்றுதான் எழுத வேண்டும்.

(எ.டு) என்னிடம் மூன்று(3) புத்தகங்கள் உள்ளன.
இதில் மூன்று என்பது பன்மை. எனவே பயனிலையில் உள்ளன என்று எழுதவேண்டும்.
இவ்வாறு எழுவாய் பன்மையில் துவங்கினால் பயனிலையும் பன்மையில் தான் முடிய வேண்டும்.

இவ்வாறின்றி. ஒரு பூனை வளருகின்றன, என்றோ,
மூன்று புத்தகங்கள் உள்ளது என்றோ எழுதினால் அது தவறாகும்.
அப்படி எழுதுவது எண்வழு எனப்படும்.
------------------------------

V அடுத்து நாம் காண்பது மரபு பற்றிய செய்திகள்:
நம் முன்னோர்கள் எச்சொல்லை எவ்வாறு வழங்கினார்களோ அச்சொல்லை அவ்வாறே வழங்குவது மரபு எனப்படும்.
(எ.டு)
1. சிங்கக் குருளை ( சிங்கத்தின் குட்டி).
2. மாம் பிஞ்சு (மாங்காயின் முதல் நிலை) 1st stage.
3. யானைக் கன்று.
4. பூனைக் குட்டி.
இவ்வாறுதான் எழுத வேண்டும். இதற்குப் பதிலாக, சிங்கக் கன்று , பூனைக் குருளை என்றெல்லாம் எழுதுவது தவறாகும். அவ்வாறு எழுதுவது மரபு வழு எனப்படும்.
----------------------------
அன்பு மாணவர்களே இதனைப் படித்தால் மட்டும் போதாது. பலமுறை பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் நிச்சயம் பிழைகளைத் தவிர்க்கலாம்.
என்ன பயிற்சியைத் துவங்கிவிட்டீர்களா? நல்லது.
மீண்டும் புதிய முயற்சியில் சந்திப்போம்.
அன்புடன் திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி.

எழுதியவர் : திருமதி.ஸ்ரீ. விஜயலக்‌ஷ்ம (7-Jul-16, 6:50 pm)
பார்வை : 569

மேலே