கலைமகள்
வெள்ளைத் தாமரையில்
நீயொரு வெள்ளி நிலா...
கொள்ளை மனத்திரையில்
தினமொரு வீதி உலா......
அறியாமை இருள் அகற்றும்
அறிவொளிக்கு ஆதாரமாய்
ஏடுகள் ஏந்தியவளே......
ஆன்மீகம் உணர்த்தும்
ஐம்பத்தொன்று மணிகள் கோர்த்து
அட்சமாலைக் கொண்டவளே......
இருகரம் எடுத்து
வீணை மீட்டும் கலைவாணியே...
ஆலயம் துறந்த இராணியே...
வெள்ளைத் தாமரையில்
நீயொரு வெள்ளி நிலா......
கல்வி ஞானமே இல்லாது
திருவருள் பெற்றதாலே
காவியம் படைத்தானே காளிதாசன்......
உன் அருள் இல்லாமலே
கவிஞரோ?... முனிவரோ?...
ஆற்றும் செயலும் அரிதாகுமே......
அள்ள அள்ளக் குறையாத
அமுதசுரபியை ஆபுத்திரனுக்கு கொடுத்தாய்...
அரசனுக்கு இணையான ஆசனமொன்றை
காளமேகனுக்கு பரிசளித்தாய்......
நாவினில் குடியிருக்கும்
நாமகள் கலைத் தேவியே...
வெள்ளைத் தாமரையில்
நீயொரு வெள்ளி நிலா......
பாலையும் நீரையும்
பிரித்துப் பருகிடும் அன்னப் பறவையை
வாகனமாய் கொண்ட அன்னையே......
பவித்ர தன்மையோடு
பாய்ந்து செல்லும் நதியும் நீயே...
ஆயக்கலையின் வடிவானவளே...
அந்தக் கலையின் மகளுமானாயே......
இசை என்னும் இன்பக் கடலில்
மூழ்க வைத்த இதய வீணையே...
இனிமை தரும் இன்னிசையும் நீயே......
நான்மறை வேதம் உச்சரிக்கும்
நான்முகனின் பதி விரதையே...
வெள்ளைத் தாமரையில்
நீயொரு வெள்ளி நிலா......