அழகிய தமிழ்மகள்
அழகிய தமிழ்மகள்
மன்மதன் மண்டியிட்டு வணங்கி நின்றான் -காமுகனாக அல்ல!
பிரம்மன் மெய்மறந்து வியந்து குறிப்பு எடுத்துகொண்டான் -
கடவுளாக அல்ல!
இதுவரை எது அழகென்று
உரைத்த கவிகள் எல்லாம்
அவர்கள் ஆறாவது விரலின் மீது கோபம் கொண்டார்கள் - பொறாமையால் அல்ல!
இவளின் அழகின் அகம் கண்டுவிட்ட சிவனும் கூட
இவளின் பாதியாய் ஒட்டிக்கொண்டானே - ஆணாதிக்கத்தால் அல்ல
யார் இவளோ? என் சிந்தையில் பேரின்பமாய் உயிர் ஊட்டுகிறாள் - எத்தனை அழகு?
அவள் கண்சிமிட்டும் அழகின் அசைவிற்கு அத்தனை கவிதை உரைத்தாலும் தீராதே?
அவளின் இயல்பின் அழகை கண்டே மூவேந்தரும் அவர்களின் கொடிக்கு சின்னம் பொறித்தார்களோ?
அவளின் விழியின் வடிவே பாண்டியன் பெருமைக்கு என்றும் பதினாறு!
அவள் குணம் கொண்ட எண்ணத்திற்கு வாசுகியின்
குலத்தோன்றலே இவள்!
இது கனவோ நினைவோ கற்பனையோ - அவளின் புற அழகின் வர்ணனை வரிகளை என் கருப்புதோல் போர்த்தி எனக்குள் ஒளித்துக்கொண்டேன் - எனக்கு மட்டுமே சொந்தம் என்பதாலே!
என் மூளையின் ஆதி வேராம் பைந்தமிழ் அது கொஞ்சுமே என் அவளின் எழிலைக்கண்டு!
எண்ணமாய்
கவியாய் ஓவியமாய் என் அவளை எவ்விதம் வடித்தாலும் அவளின் எழிலுக்குமுன் தோல்வியை பரிசாய் பெற்ற பெருமைபித்தன் நான்!
அவளின் அகஅழகிலும் பாதியாய் ஒட்டிக்கொண்ட சிவனும் நானே - அந்த அழகிய தமிழ்மகள் யாரோ?
மன்மதனுக்கும் அவ்வையின் தமிழ் கலாச்சார மந்திரத்தை போதித்த அழகிய தமிழ்மகள் யாரோ?
அவள் கருவிழி கொண்டு மீன்குறியாய் என் இதயத்தில் சின்னம் பெற்ற பாண்டியனும் நானே - மூவேந்தருக்கும் முடி சூட்டிய அந்த அழகிய தமிழ் மகள் யாரோ?
ஆயிரம் ஜென்மங்களால் நான் மறந்தேனா? சிவனாய் பாண்டியனாய் நினைவுகூர்ந்தேனோ?
என் மூளையின் ஆதி வேராம் பைந்தமிழ் அது கொஞ்சுமே என் அவளின் எழிலைக்கண்டு!
என் தமிழ் தந்த பொக்கிசமாய்
மூன்று முடிச்சால் நெடுங்கால தவத்திற்கு வரம் கொடுத்த அந்த அழகிய தமிழ் மகள் இவளே -என் மூச்சின் அகமுடையாள்!
அழகோ! தமிழோ! எதைப்பற்றி சிந்தித்தாலும் முழுதோற்றமாய் முந்தி கொண்டு காட்சி தருகிறாள் -திருமதி.மருதுபாண்டியனாய்
என் அழகிய தமிழ்மகளாய்!!!