போர்வை கனவு
கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்கும்
ஒரு பெருமழையின் நீண்ட இரவில்
அழுக்கடைந்த போர்வைக்குள்
கால்களை முடக்கி
அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்
அர்த்தமற்ற பல கனவுகளை!
சிலீரென்று என்னை தாக்கும்
அந்த பேய்க்காற்றை தடுத்தவாறே
என்னை காத்து என்மீது படர்ந்திருக்கிறது
அந்த அழுக்கடைந்த போர்வை!
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த
காலம் வரை அப்பாவின் வேட்டியோ
அம்மாவின் சேலையோ
என்னை காக்கும் போர்வையாக இருந்துள்ளது!
ஊருக்கு செல்லும் போதெல்லாம்
உறவினர் வீடுகளில் இருக்கும் போர்வைகள்
என்னை பலமுறை காத்துள்ளன!
காலத்தின் பயணத்தில்
கைகளில் நாலுகாசு புழங்க தொடங்கியதும்
முதலில் வாங்கியது போர்வைதான்!
முதன்முதலில் சொந்த காசில் வாங்கிய
போர்வையை நான் போர்த்திப் படுத்தப்போதுதான்
ஞாபகம் வந்தது
இறக்கும்வரை அப்பா போர்வை சுகம்
அறியாமலேயே போய் சேர்ந்தது!
ஒவ்வொரு தீபாவளிக்கும்
புதுப்போர்வை எடுத்து
அப்பாவுக்கு படைத்து
போர்வை வாங்க வசதியற்ற
ஒரு முதியவருக்கு கொடுத்து வரும்
மனநிறைவில் அப்பாவின் ஆசி கிடைக்கும்
எனும் நம்பிக்கை துளிர்க்கிறது....
இடு