விழியே மொழியானால் ========================

பயன்பாடற்றுக் கிடக்கின்ற
மௌனத்தின் அகராதிகளை
மனனம் செய்துகொள்ள
காதல் மாணாக்கர்களுக்கு
ஒரு வரப்பிரசாதமாகும்

உயிர்கொல்லும்
பார்வை விஷத்தின் தன்மையை
அறிவுறுத்தல்களாய் எழுதும்
எச்சரிக்கைக் வாசகங்களை
வாசித்துக்கொள்ள ஏதுவாகும்

தபால் தொடர்பு மறைந்த தேசத்தில்
அன்பை நேரடியாகவே
பரிமாற்றம் செய்ய
பணடமாற்று முறைக்கு ஒத்தாசையாய்
விளைந்த பணத்தைப்போல
இதயமாற்று செய்யும் காதலர்க்கு
தரகராய் விளையும்.
சம்மதத்தின் பாடலை
சங்கீதம் இன்றிக் கேட்டுக்கொள்ள
காதலர்க்கு கைகொடுக்கும்

நாலு பேர்க்கு மத்தியில்
நாகரீகமாய் பேசிக்கொள்ள
தடங்கள் இல்லாமல் போகும்

இதயத்தை கைதுசெய்யும்
சமிஞ்ஞை குறிப்பை
எழுதிக்கொள்ள இலகுவாகும்

மறுதலிப்புகளை சூசகாமாய்
காட்டிக்கொடுத்து
மனத்விப்புக்களை அறிவிக்கும்
காதல் பத்திரிகையின்
சோகக் கவிதைக்கு
சந்தோசம் வழங்கலாம் .

விற்பனை செய்யப்படாத அன்பை
விளம்பரமின்றி வாங்கலாம்

அச்சகமின்றி பத்திரிகை நடத்தும்
அதிசயம் நிகழ்த்தலாம்

எதிரியை வீழ்த்தும் குழியை
இலகுவாய் பறிக்கும்
விழிகளின் மொழிகள்
வாழ்க்கையை நேசிக்கக்
கற்றுக்கொடுக்கும் பக்குவத்தை விதைக்க
வளமான நிலமாகும் பட்சத்தில்
மொழிகளுக்கான சண்டை தொலைத்து
சமத்துவத்திற்கான வழிகள் சமைத்து
அன்பை எழுதும் ஆயுதமாகும்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Jul-16, 2:19 am)
பார்வை : 124

மேலே