மீசை முளைத்த அயிரை மீன்

அன்னத்திற்கு நடை பயில
கற்றுத் தருபவளே!
நன்றாய் நடந்துக் கொண்டு இருந்தவனை
தடுமாறிக் கீழே விழச் செய்தவளே!

இவ்வழியில்தான்
தினமும் நீ வருவியோ...?
நாளைக்கு வந்திங்கு -எனை
என்ன செய்யப் போறீயோ...?

உன் பெயரைக் கேட்க துணிவில்லை
தினம் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை
எனினும் நேற்றுக்கு இன்று
நான் கொஞ்சம் தேவலை...!

இன்றேனும் உன்னுடன்
தனியாய் நின்று பேசலாம் என்றிருந்தேன்...
வெட்கத்தைக் கூடவே தினம் நீ கூட்டிக் கொண்டு வந்தால்
எப்படி உன்னுடன் மனம் விட்டு பேச முடியும்...?

குனிந்த தலை நிமிராமல்தானே
தினம் நீ நடந்து வந்தாய்...
அப்புறம் எப்படி என் முகத்தை கண்டாய்?

ஆண்களுக்கு மீசை அரும்பும் போது
நெஞ்சில் ஆசை முளைப்பது போலே...
பெண்களுக்கு ஆசை மலர்வதுதான் எப்போது?
எனக்குள் எழுந்திருக்கும் ஐயத்தை
நீதான் தீர்க்க வேண்டும் இப்போது...!

ஆற்றங்கரையில் நீ நடந்தால்
ஆம்பளை மீன்களெல்லாம்
சந்தோசத்தில் துள்ளும்...

குளத்தங்கரையில் நீ நடந்தால்
ஆம்பளைக் கொக்கெல்லாம்
ஒற்றைக் காலில் நின்றுதான் தவம் புரியும்...
கயல்விழி மீனினை பிடித்து உண்ணவே!

ஒரு நிலவாய் விண்ணிலே
நீ உலா வந்தாள்...
இம்மண்ணில் பிறந்த ஆண்களெல்லாம்
தன் கண்களில் எண்ணெய் ஊற்றி
இரவெல்லாம் உன்னை இரசிக்கதான்
தினம் விழித்திருக்கக் கூடும்...!

என் தோட்டத்து கிணற்றில்
ஆளாகியிருக்கும் ஆம்பிளை மீன்களெல்லாம்
உன்னைக் காணத்தான் உயிர் வாழுது...
ஒரு நாள் இறங்கி நீ குளித்தால்...
அயிரை மீனுக்கும் மீசை முளைக்கக் கூடும்!
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
என் ஆசையை எப்படி சொல்ல?
உன் வெட்கத்தை விட்டுவிட்டு வந்தால் போதும்
உன்னால்தான் என்னாசையை கொல்ல முடியும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Jul-16, 7:18 pm)
பார்வை : 150

மேலே