வேறென்ன வேண்டும் எனக்கு
நீண்ட வானம்
நீலக் கடல் நீளும் ரசனை
நெருக்கத்தில் நம் நேசம்
வேறென்ன வேண்டும் எனக்கு?
பரந்த பூமி
பசிய புல் வெளி
பக்கத்தில் நீ
வேறென்ன வேண்டும் எனக்கு?
நீண்ட தார்ச்சாலை
நீளும் பயணம்
அந்திப்பொழுது
அருகருகே நீயும் நானும்
வேறென்ன வேண்டும் எனக்கு?
மேகங்கள் காதல் கொள்ளும்
கறுப்பு மலையோரம்
கால் நனைக்கும் அருவி
கக்கத்தில் உன் வெப்பம்
வேறென்ன வேண்டும் எனக்கு?
சலசலக்கும் நீரோடை
சங்கீதப்பறவைகள்
பாட்டுக்கு இளையராஜா
பா எடுக்க நீ
வேறென்ன வேண்டும் எனக்கு?
கற்பனைக்குக் கவிதை
கால்தடவும் கடும்பனி
தலை சாய்க்க உன்மடி
தலைகோதும் உன்விரல்
வேறென்ன வேண்டும் எனக்கு?
பகல் கிழித்த கருமை
அனல் தொலைத்த நிலவு
நெற்றியில் உன் முத்தம்
வேறென்ன வேண்டும் எனக்கு?
நடுநிசிக் குளிர்காற்று
மடி மீது நட்சத்திரங்கள்
வெப்பத்தில் நம்மூச்சு
முடியாத பிரளயம்
இனி
வேறென்ன வேண்டும்
எனக்கு?