உழவன் வலி
ஒரு மாலையின்
நடு நேரத்தில்
கதிரவன் கண்ணயரத் தடவுகின்றான்
மலையின் நடு ஓரத்தில்
உழவன்
நிலத்தின் நெஞ்சை
கிழிக்க முயல்கிறான்
தளத்தில் நெல்லை
கொழிக்க முயல்கிறான்
களைகளை அறவே
அழிக்க விழைகிறான்
காளைகளைப் பூட்டி
பிழைக்க விழைகிறான்
உடல் வலியைப் பாராமல்
உழைக்கப் பயில்கிறான்
இயற்கைச் சீற்றத்தின் நடுவே
விவசாயம்
இயற்றப் பயில்கிறான்
நீர் கூட இவன் நிலத்தில்
சரியாய்ப் பாய்வதில்லை
நீருக்கு பதில் வியர்வைச் சிந்தாமல்
இவன் என்றும் ஓய்வதில்லை
அந்தி சாயும் வேளையிலும்
இவன் அங்கம் சாய்வதில்லை
உழவன் நிர்ணயிக்கும்
விலை மட்டும்
எங்கும் சாய்வதில்லை
இதைக் கண்டும் கூட
யாரும் இங்கே உழவனுக்காக
சட்டம் வேய்வதில்லை
உழவன் மட்டும்
தான் கிழவனாகும் வரை
உழைக்கிறான்
தான் உரிஞ்சப்பட்டோம் என்பதை
அன்றுதான் உணர்கிறான்
உழவனின் உழைப்பைப் போற்றுவோம்
அவர்களின் நிலையை மாற்றுவோம்