ராஜகுமாரா
தாய்மனத்தைத் தவிக்கவிட்டுத் தலைமகனே பறந்துவிட்டாய்
ஓய்வெடுக்க இதுவயதோ உத்தமனே உரைத்திடுவாய்
பாய்விரித்துப் படுக்குமுன்னே பாவியமன் அழைத்தானோ
வாய்வலிக்கக் கதறியது மகனுனக்குக் கேட்கலையா ?
யாதுமாகி நின்றாயே யமனுக்கே பொறுக்கலையோ
ஏதுசெய்ய நீயேசொல் என்மகனே புலம்புகின்றேன்
மோதுகின்ற எண்ணங்கள் மூச்சடைக்கச் செய்கிறதே
போதுமப்பா சோதனைகள் புவிவாழ்வும் புளித்திடுதே !
ஓவியமாய் இதயத்தில் ஒன்றிவிட்டக் கண்மணியே
பாவியென்றன் விதியைநொந்து பாழுமுள்ளம் துடிக்கிறதே
தாவிவரும் நினைவலைகள் தத்தளிக்க வைத்திடுதே
தீவினையோ வல்வினையோ தீராத சோகமிதே !
கல்தூணாய் நீயிருந்தாய் கவலையின்றி மகிழ்ந்திருந்தோம்
இல்லாமற் போனாயே இனியென்ன செய்திடுவோம்
பல்லக்கில் அனுப்பிவிட்டுப் பரிதவித்துக் கிடக்கின்றோம்
சொல்லியழ வார்த்தையின்றித் துயர்நெஞ்சை அடைத்திடுதே !
பட்டமரம் நானிருக்கப் பசும்மரம்நீ சாய்ந்ததுமேன்
சட்டென்று சென்றுவிட்டாய் சாகுமட்டும் அறுக்குமப்பா
முட்டிமுட்டி அழுதாலும் முன்னேநீ வரவில்லை
எட்டியுனைப் பிடித்திழுக்க இருக்குமிடம் தெரியவில்லை !
ஊற்றெடுக்கும் உன்நினைவு உள்ளத்தை அரித்திடுதே
ஆற்றவொணாத் துயராலே அன்றாடம் துடிக்கிறதே
காற்றினிலே மிதந்துவந்து கண்ணீரைத் துடைத்திடுவாய்
கூற்றுவனை இறைஞ்சிடுவேன் கூப்பிடவே சடுதியிலே !