காதல் வலி

கண்ணுக்கு கண்ணாக வந்து
கண்களைப் பிழிந்தாள்...
நெஞ்சுக்குள் உயிராய் மலர்ந்து
செந்நீரைக் குடித்தாள்......
கண்ணுக்கு காட்சி தந்தவள்
கண்ணீராய் ஆட்சி செய்து
வெங்காயத்தால் அழுத விழிகளை
பெருங்காயத்தால் அழுதிட வைத்தாள்......
மருந்தாய் என்னில் நுழைந்தவள்
விருந்தாய் இதயத்தை திண்று விட்டு
ஒருகை குலுக்கி எனை விடுத்து
பருந்தாய் பறந்துச் சென்றாள்......
மலர் கரம் தொட்டாலேப் போதும்
மலரென முகம் பூத்திடுவேன்...
மாது கரம் தீண்டும் அந்நேரம்
மதுகரம் தீண்டும் வலி உணர்ந்தேன்......
பிரிவு என்னும் தீயொன்று
உள்ளத்தில் பற்றி விட்டதால்
உணர்வுகள் உறங்காது எரியுது
எரிமலை பிழம்புகளாய் இதயம் சிதறுது......
மேகம் தரும் மழை நீரும்
தேகத்தின் வெப்பத்தால் ஆவியாகுமோ?...
தண்ணீரில் மூழ்கியே இருந்தாலும்
தனிமைத் தாகம் எனைக் கொள்ளுமே......
பனித்துளிக் கூட சுடுகின்றது...
பகலும் இருளாய் சூழ்கின்றது...
நெஞ்சில் உள்ள நினைவுகளும்
நஞ்சாய் உள்ளே கசிகின்றதே......
மலரே நீ உதிர்ந்து விட்டால்
மரணம் உனக்கல்லவே...
மணம் இல்லாது நிற்கும்
இந்த மனதுக்குத் தான்......
உயிரே நீ விலகி விட்டால்
இருப்பது உடல் அல்லவே...
வெறும் சாம்பல் தான்...
நீயில்லாது உடல் சாம்பல் தான்......