நீல் ஆம்ஸ்ட்ராங்

எம் பாட்டி தனியாளாய்
வடை சுட்ட நாளதிலே
துணையாய் கால்தடம்
பதித்தவன் நீ!
பாற்குளமாய்,கடலாய்
உருவகித்த நாளதிலே
வெண் தோசையாய்
ஆசையாய் உறங்குவித்த
பொருளதிலே
உன் தடத்தால் உறக்கம்
கெடுத்தவன் நீ!
உன் பதம் கண்ட பிறகே
உலகம் விழித்துக்கொண்டது!
நிலா எட்டா
கனவல்லவென உணர்ந்துக் கொண்டது!
நிலவில் காற்றுண்டா?
இல்லையா?
பதில் சொன்னது
நீ நட்ட கொடி!
நிலவில் மலைகளுண்டா?
இல்லையா?
தெளிந்தது நீயனுப்பிய
ஒளி!
சரித்திரம் படைத்தயெம்
சந்திராயனும்
நீ காட்டிய வழி!
மறைந்துப் போனாலும்
மாமனிதனே!
மதியொளி
மனம் நனைக்கும்
நாள்வரையில்
மறையாதுன் நினைவுகள்!
சாதனை வானிலென்றும்
பொன்னொளி வீசும்
உன் பதிவுகள்!
நீல் ஆம்ஸ்ட்ராங்கே!
நீல விழியோனே!
நீயொரு தேசத்திற்கான
பிம்பமல்ல....
லட்சோப லட்ச
கனவுகளின் பிரதிநிதி!!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (5-Aug-16, 12:37 pm)
பார்வை : 111

மேலே