இனியவளே
எந்த தேசத்து பட்டில் செய்தது
உன் மேனியென்று
இந்த தேசத்து பட்டு பூச்சிகள்
பட்டிமன்றம் நடத்துகின்றன.
பூக்கள் நடத்திய மாநாட்டில்
நீதான்
தலைவியாமே.
உன்பார்வைச் சூரியன் பட்டதும்
பூத்துச் சிரிக்கிறேன்
இந்த சேற்றுத் தாமரை சந்திரன்.
நீ வயல்வரப்பில் நடக்கையில்
நாற்று நடனமிடும்
நீ கடற்கரையில் இருக்கையில்
காற்று சலனப்படும்
உன் சேலைப் பூச்சிகளை நோக்கி
சோலைப் பூச்சிகள் படையெடுப்பு
உன்னிடம் அல்லியும் தாமரையும் மணப்பதால்
நீயுமொரு பூங்கா படைப்பு
அந்திச் சூரியனும்
அந்த சந்திரனும் சந்திக்குமிடம்
உன் நெற்றி மேட்டில்தானே ..
பொட்டாக சூரியனும்
பிறையான நெற்றியும்
நிலவைப் பிடித்து
நீண்ட நேரம் செதுக்கி
நளினப் பெண்ணாக உலவ விட்ட சிற்பியை
நான் காண வேண்டும்
தாமரை மலரெடுத்து பாதமமைத்து
தரணியில் உலவவிட்ட அவன் கரங்களுக்கு
தங்க காப்பு போட வேண்டும்
நீ வெட்டியெறிந்த நகத் துண்டுகளில்
ஒட்டித் தெறித்த நிலவுகள் பார்த்து
நாசா விஞ்ஞானிகளும்
கொஞ்சம் நிலை கலங்கித்தான் போனார்கள்....
தென்றல் பிடித்து திரியாக்கி
தேவி உந்தன் ரூபம் செதுக்கினேன்
கொன்றை பூக்களில் மாலையாக்கி
காலை மாலை மந்திரம் ஓதினேன்.
நீ சிதறவிட்ட சிரிப்புச் சில்லறையை
தர மறுத்த கடைக்காரரை
கன்னத்தில் அறைந்து விட்டேன்.
நீ கடைவீதி வந்தாலே
அதிக வெளிச்சம் வேண்டாமென்று
நிலவும் சற்று மறைந்து கொள்கிறது
முத்தாய்ப்பாய் நீஇருக்க
முகம் பார்த்து தலை சீவ
நான் வாங்குவதில்லை முகக் கண்ணாடி
நீயே கண்ணாடி-
நினக்குமுன்
நாணிப்போகும்
அந்த நிலைக்கண்ணாடி
தோற்காத நானும் தோற்றுப் போகிறேன்
உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தேடி
போர்க்கால உத்தியெல்லாம்
புறமுதுகிட்டோடும்
உன்வேல்விழி பார்வைக்கு முன்னாடி.