அந்த நாள் ---படித்த மறக்கமுடியாத செய்திகள்

வைகைக்கரை காற்றே!......033

நந்து ஒண்ணாப்பு படிக்கிறப்ப நேரு மாமா மானாமதுரைக்கு வந்தாரு. ஒக்கூர் வெள்ளையஞ்செட்டியார் பள்ளிச் சிறார்கள் சீருடை அணிந்து கையில் ஒரு சின்ன தேசியக்கொடியுடன் நேரு மாமாவை வரவேற்கச் சென்றனர். நேரு மாமா ஊருக்குள் வரவில்லை. ஊர் வழியாகச் சென்றார். எனவே குழந்தைகளெல்லாம் மத்தியான வெய்யிலில் கால் கடுக்க வைகையாத்துப் பாலம் வரை நடந்தே சென்றனர். நேரு ஒரு திறந்த ஜீப்பில் கண்ணைப் பறிக்கும் வெள்ளை ஷெர்வாணியணிந்து, ஒரு சின்ன ரோஜாப்பூவை சட்டைப்பாக்கெடுக்கு அருகில் செருகியிருந்தார். அவருக்கு குழந்தைகளென்றால் பிடிக்குமென்றும் அதனால் குழந்தைகள் கட்டாயம் போகவெண்டுமென்பது ஏற்பாடு. நந்து போன்ற பல குழந்தைகளுக்கு அதுவும் ஒரு வேடிக்கை. கொஞ்ச நேரம் காத்துக்கொண்டிருந்த பிறகு நேருமாமா வந்தார், சிரித்துக்கொண்டே! குழந்தைகள் கொடியை ஆட்டின. நேரு கையை ஆட்டினார். "நேரு மாமாவுக்கு ஜே!" என்ற சத்தம் வானைப்பிளந்தது. சில நொடிகளில் அவர் பாலத்தைக் கடந்து சென்று விட்டார். அன்று பலருக்கு தெய்வத்தைப் பார்த்த பரவசம். நந்துவிற்கு பசித்தது.

திருப்புவனம் வந்த பிறகு அரசியல் சூடு பிடித்தது. காங்கிரஸிலிருந்து ராஜாஜி விலகி 'சுதந்திராக் கட்சியை' ஆரம்பித்தார். அதற்கு பிராமணர்களிடையே கொஞ்சம் வரவேற்பு இருந்தது. நந்து வீட்டில் மஞ்சள் தாத்தாவிற்கு ராஜாஜி மீது ஏகப்பட்ட பற்று. அவர் ரூமெல்லாம் விதவிதமான ராஜாஜி படமிருக்கும். அவை பெரும்பாலும் கல்கி இதழ் அட்டைப்படமாக இருக்கும். திருப்புவனம் தொகுதியிலிருந்து சுதந்திராக்கட்சியின் சார்பில் பூவந்தி சீமைச்சாமி போட்டியிடுவதாக ஏற்பாடாகியிருந்தது. திருப்புவனம் பஞ்சாயத்து போர்டு சேர்மன் என்ற ஸ்தானத்திலிருந்து அவர் எம்.எல்.ஏ கனவு கண்டார். அதற்கு ஆதரவு திரட்டும் வண்ணம் வீடு வீடாக படி ஏறி இறங்கினார். பூவந்திக்கும் மஞ்சள் தாத்தாவிற்கும் வேறொருவகையில் ஒரு பூடகமான உறவு உண்டு. எனவே மஞ்சள் தாத்தா சீமைச்சாமியை ஆதரித்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால் இவர்களுக்கு நிறைய காங்கிரஸ்காரர்களையும் தெரியும் எனவே தாத்தாவிற்கு சுதந்திராக் கட்சியின் ஆதரவை நேரடியாகக் காட்ட முடியாத நிலை. வீட்டிற்கு வந்து சீமைச்சாமி எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். செல்லம்மாள் பள்ளியில் முதல் மாணவியாக இருப்பது அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. எனவே வீட்டிற்கு வரும் போது மறக்காமல் அது பற்றிப்பேசினார். எல்லோருக்கும் சீமைச்சாமியைப் பிடித்துப் போய் விட்டது. அவர் போன கொஞ்ச நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் வந்தார்கள். ஆளும் கட்சி ஆட்கள். பகைத்துக் கொள்ளமுடியாது. எனவே எல்லோரும் அவர்களுக்கே ஓட்டுப் போடுவதாக வாக்களித்தனர். ஓட்டுப்போடும் அன்றைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

மஞ்சள் தாத்தா ஒரு ஏற்பாடு செய்தார். காங்கிரஸ்காரர்களிடம் அவர்களுக்கே ஓட்டுப் போடுவதாகச் சொன்னால் அவர்கள் ஓட்டுச்சாவடிவரை இலவசமாக கார் சவாரி தருவார்கள். வெய்யிலில் நடக்க வேண்டாம். வீட்டுப்பெண்கள் ஓட்டுச் சாவடிக்கு தெரு வழியாகப் போக வேண்டாம். அங்கு போய் யாருக்கும் தெரியாமல் எல்லோரும் ராஜாஜி கட்சிக்கு ஓட்டுப்போட்டுவிடுவது என்பதுதான் அந்த ஏற்பாடு! அம்மாவிற்கு இந்த திருகுதாளமெல்லாம் பிடிக்காது. அவளுக்கு வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று இருப்பதுதான் பிடிக்கும். ஆனால் அண்ணா உத்தியோகம் கவலை அவளுக்கு உண்டு. எனவே வேண்டாவெறுப்பாக மஞ்சள் தாத்தாவின் ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டாள்.

நாத்திகக்கட்சியிலிருந்து பிரிந்து திராவிடக்கழகம் தனியாக தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்பாடாகியிருந்தது. காங்கிரஸ்காரர்களுக்கு பேசவே தெரியாது. ஆனால் கழகப்பேச்சாளர்கள் வீராவேசமாகப் பேசுவார்கள். பராசக்தி புகழ் கலைஞரின் உரைகள் மிகப்பிரபலமாகியிருந்தன. அண்ணா ஒரு புதிய நட்சத்திரமாக தென்னக வானில் உலா வந்தார். அக்கிரஹாரத்து சனங்களுக்கு திராவிட கழகத்தின் மீது துளிக்கூட பற்று இல்லையென்றாலும் மாணவர் மத்தியில் கழகம் புகழ் பெற்றிருந்தது.

பள்ளியின் தமிழ்
ஆசிரியர்களெல்லாம் கழக ஆதரவாளர்களாக இருந்தனர். ஒரு தமிழ் அலை வீசிக்கொண்டிருந்தது. அதில் கழகம் நீந்திக்கொண்டிருந்தது.

கழுவேற்றும் பொட்டலில் தடபுடலாக மேடை அலங்காரமெல்லாம் இருந்தது. அன்று அறிஞர் அண்ணா திருப்புவனத்தில் பேசப்போகிறார் என்ற பரபரப்பு. பள்ளிக்குப் போகும் வழியெல்லாம் இதே பேச்சு. நந்துவிற்கு அண்ணாவைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவர் பள்ளி நேரத்தில் அங்கு வருவதாக ஏற்பாடு. பள்ளிக்கு களவடிக்க இஷ்டம்தான். ஆனால் யாராவது வீட்டில் கோள் மூட்டிவிட்டால் பிரச்சனை. படிப்பு தவிர வேறு எந்த விஷயத்தில் ஈடு பட்டாலும் கோகிலம் ராட்சசியாகிவிடுவாள். எனவே மனிசில்லாமல் நந்து பள்ளி போனான்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் ஏகப்பட்ட கூட்டம். அண்ணா பேசிக்கொண்டிருந்தார். கூட்ட நெரிசலில் அவரைப்பார்பதே அரிதாக இருந்தது. எப்படியோ கூட்டத்துள் நுழைந்து நந்து முன்னால் போகும் போது அண்ணா பேசி அமர்ந்தார். மாலைகள் அணிவிக்கப்பட்டன. கொஞ்ச நேரத்தில் அண்ணா போய்விட்டார். மாணவர் மத்தியில் பல நாட்கள் இதுவே பேச்சாக இருந்தது.
Narayanan Kannan

எழுதியவர் : (12-Aug-16, 8:25 am)
பார்வை : 133

மேலே