உலா வரும் நிலா
தொட்டிலிட வந்தபிள்ளை துள்ளிக் குதித்து
=துயிலாமல் விளையாடி தெத்துப் பல்லால்
குட்டியாகச் சிரிக்கின்ற குறும்பு வாழ்வில்
=குளுகுளுன்னு இதயத்தில் குளிர்ச்சி யூட்ட
பட்டப்பகல் பொழுதில்கூட பால்போல் நிலவு
=பக்கத்திலே உலாவர பார்த்து நிற்க
கட்டுப்பா டற்றதொரு காட்டு வெள்ளம்
-கரைபுரண்டு ஓடுகின்ற காட்சி யாகும்
எல்லையற்ற இன்பத்தின் எழிலாய் வந்து
=இல்லையில்லை என்றிருந்த இன்னல் போக்கி
தொல்லையுற்றுக் கிடந்தவர்கள் தோலின் மேலே
=துயில்வதற்கு அடம்பிடிக்கும் தூய நிலா
அல்லுபகல் மனவானில் அன்பின் ஒளியால்
=அகத்திருளை அகற்றிவைத்து உலாப் போகும்
பிள்ளையென வாய்த்துவிடின் பிறந்த பயனை
=பெற்றவரும் பெற்றிடுவார் பிள்ளை யாலே
*மெய்யன் நடராஜ்