மஞ்சள் கொள்ளை கொண்ட வெண்முத்தே ~ஆதர்ஷ்ஜி

மஞ்சள் கொள்ளை கொண்ட வெண்முத்தே.... ~ஆதர்ஷ்ஜி
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
கடலில்லா காஞ்சியில் கிடைத்த நல்முத்து
காமாலை சிப்பிக்குள் அடங்கிப் போனதே அய்யோ!
பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சி
பாட்டுக்குப் புகழ்பெற்ற துன்னால்!
உன் முற்றத்தில் வந்தாடிய அணில்கள் சுற்றத்தின்
அருமை சொன்னன...!
நீ அடைகாத்த
காக்கா முட்டைகளிலிருந்து
பறந்தன எப்போதும்
கவிதைக் குயில் குஞ்சுகள்...!
மனிதத்தை நேசித்த உன்
புனித வரிகளால்
வடக்கிற்கும் தெற்கிற்கும்
விருதுகளால் அமைந்ததோர் பாலம்!
கவிதைத் தொகுப்பாய்
நீ எழுதிய
குடும்பம் இன்று
காலம் கலைத்து எறிந்த வார்த்தைகளாய்...
தீபத்தின் அருகே உன் துணை
தீபலக்ஷ்மி - இருள் சூழ....
உன் தந்தையாய் நீ வாழ
நீ பெற்ற மகன் ஆதவன்
-சோக மேகம் சூழ்ந்து!
அறியா வயதில்
உன் குட்டிக் கவிதையாய்
தங்க மீ்னாய் மகள் யோகலக்ஷ்மி-அழுகை யாழ் மீட்டிக் கொண்டு!
கடவுளுக்கு கவிதையேனும்
தேவையென அழைத்தாரோ?
கடமை முடித்து உடன் திரும்ப வா.!
காத்துக் கிடக்குதிங்கு
கவிதையாகிடத் துடிக்கும்
தமிழ்ச் சொற்கள்.
~ஆதர்ஷ்ஜி
(மஞ்சள் காமாலையால் அகால மரணம் அடைந்த கவிஞர்
நா. முத்துக்குமார் அவர்களுக்கு இதய பூர்வமான அஞ்சலி )