ஊஞ்சலாடும் மனம் ====================
நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நண்பர் வட்டம்
=நன்றியினை மறக்கின்ற நாட்கள் நெஞ்சம்
வெம்பியழும் வேதனையின் வீக்கம் வற்றி
=விதிவழியே நடக்கையிலே வஞ்சம் நீங்கி
கம்பிவேலி தடைதாண்டும் காற்றைப் போன்று
=கனத்தமனம் சுதந்திரமாய் கவிதைப் பாடி
தெம்புதனை மீட்டெடுத்து திரியும் காலம்
=திரும்பவுமே ஊஞ்சலாடும் தெளிந்த உன்மனம்.
கைப்பிடிக்கக் காத்திருந்தக் காதல் பட்சி
=கைமாறிப் போய்விட்டக் காட்சிக் கண்டு
மைபூசும் கண்களுக்குள் மயங்கி வீழ்ந்து
=மரணித்த காதலினை மனதில் ஏந்தி
மெய்வருத்தி சீர்குலைந்து மீளாத் துயரில்
=மதுவருந்தி தனைமறக்கும் மடமை விட்டு
உய்வதற்கு வழிகள்தேடி உயரும் வேளை
=ஊஞ்சலாடும் உவகைகளின் உறைவிட முன்மனம்
வளர்த்தெடுக்க வாழ்வதையே வருத்திக் கொண்டு
=வளர்பிறையாய் ஆவதற்கு வானாய் நின்று
உளம்முழுதும் உந்தனையே உயிராய்ச் சுமந்து
=உயர்த்திவிட்ட பெற்றவர்கள் உள்ளம் குளிர
அளவற்ற அன்புதனை அமுதாய்ப் பொழிந்து
=அந்திமத்தில் உன்னருகே அவரை வைத்து
குளக்கரைகள் அரவணைத்தக் கொடிகள் போன்றுக்
=கூத்தாட ஊஞ்சலாடும் குறையிலா மனமும்
*மெய்யன் நடராஜ்