நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைத்தான்
தோழனே
எதையுமே நீ
தெரிந்திருக்க
வாய்ப்பில்லைத்தான்
உன் உலகில்
காதல் களியாட்டங்களில்
கழிக்கப்படும் பதின்நான்கு
என்னால் வெறுக்கப்படும்
பதின்நான்கு என்பதை
நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைத்தான்
முக்குளித்து எழுகின்ற
முடிந்துபோன காலம் தரும்
மூர்க்கத்தனமான முடிச்சுக்களின்
இறுக்கங்கங்களில்
இறுகிப்போயிருக்கும் என்
பதின்நான்கு
கூடிப்பிறந்த குருவி ஒன்று
பேரினப்பெருந்தீயில்
கருகித் தொலைந்த
நாள் பதின்நான்கு
சித்திரை வாசலின்
திளைத்திருப்பொன்றில்
துயரச்செய்தியில் என்
செவிப்பறை கிழிந்த
நாள் பதின்நான்கு
பாதுகாத்து வைத்திருந்த
பாட்டனின் சுவடியில்
காலத் தீ
பற்றிக்கொண்டதும்
ஒரு பதின்நான்கு
காத்திருந்து காண இருந்த
கல்லறைகள் எல்லாம்
கிளறி எறியப்பட்டதும்
ஒரு பதின்நான்கு
அந்த மரத்தின் கீழ்
இல்லை இல்லை
இந்த இந்த இலைகளின் கீழ் என
அவள் சுவடுகள் தேடியதும்
ஒரு பதின்நான்கில்
அத்தனை விகாரமாய்
என்னுள் அடர்ந்துபோன
பதின்நான்கின்
எஞ்சிய மிச்சங்களில்
எச்சங்களை தேடுபவளாகவே
இன்னும் நான்
இவை எதையுமே
நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைத்தான்
தெரிந்திருக்கவும்
வாய்ப்பில்லைத்தான்
வினோ சர்மிலா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
