பொறாமை

#பொறாமை...!

தன்னை அழிப்பதற்கு கொடிய விடமொன்று
தாமே சமைப்பார் அது பொறாமை
அள்ளிப் பிறர் நெஞ்சில் கொல்லி நெருப்பெனவே
வீசி மகிழ்வார் அது பொறாமை..!

தன்னைத்தான் கொல்லும் கொடிய சினம் போலும்
தன்னையே கொல்லும் அது பொறாமை
அரக்கப்பசி போல ஆட்டிப் படைத்திடும்
உறக்கம் நீக்கிடும் அது பொறாமை..!

தோல்வி காண்கையில் வெற்றி கொண்டவனை
வீழ்த்த நினைப்பார் அது பொறாமை
வெற்றி இரகசியம் கண்டு உணர்ந்திட
கண்ணை மறைக்கும் அது பொறாமை..!

அன்பு மனதோடு பிறரை எண்ணுகின்ற
நெஞ்சில் இல்லை என்றும் பொறாமை
பிறரின் உயர்வினில் உள்ளமும் மகிழ்ந்து
பாராட்டும் மனதிலில்லையே பொறாமை..!

பொறாமையொழித்தவர் மனது பூக்காடு
வாசம்... வாசம்... அவரின் நேசம்
அன்பு காற்று குளிர்ந்து அங்கு வீசும்
அவர் வடிவினில் மனிதமும் பேசும்..!

பொறாமையொழித்தவர் பாதை யாவுமே
வெற்றி.. வெற்றி.. இலக்கோடு
எதிர்க்க எவர் வரின் கவனம் இலக்கினில்
என்றோர் வாழ்வினில் வழக்கேது..?

எழுதியவர் : சொ,சாந்தி (20-Aug-16, 8:11 am)
Tanglish : poraamai
பார்வை : 798

மேலே