உணர்வுகளின் அடுக்குகளில்
உற்று நோக்குகையில்
உணர்வுகள்
ஒவ்வொன்றுமே
இயல்பானவை போலவே தோன்றலாம்
உணரும்போது
அது உண்மையல்ல என்பதும்
புரியலாம்
ஒவ்வொரு உணர்வுமே
ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு
மாறுபட்டும் தோன்றலாம்
அதன் விளைவாகவே
எவற்றின் மீதும்
பிரியமோ காழ்ப்போ
விருப்பமோ வெறுப்போ
உருவாகலாம் ..
இதற்கு நிகழ்வுகளும்
சக மனிதர்களும் ..
ஏன் ..
சரித்திரமும் கூட
சான்று கூறலாம் !
உணர்வுகளின் அடுக்குகளில்
வன்மங்களும் குரோதங்களும்
நேயங்களும் நிர்மலமான
எண்ணங்களும் ..
மோகங்களும் காமங்களும்
தூசி படிந்தே கிடக்கக்கூடும்..
எது மேலேறி வருகிறது
எது அமிழ்ந்து ஆழத்தில் மறைகிறது
எது வெளிப்படுகிறது
எது மறைக்கப்படுகிறது
என்பதெல்லாம்
உணர்பவருக்கே வெளிச்சம்
இது மானுடத்திற்கு
கிடைத்த வரம் என்று கூட
பெருமிதம் கொள்ளலாம்..
விலங்குகளுக்கு இந்த
வசதி இல்லை ..
என்பது புலனாகலாம் ..
உணர்வுகளின் வண்ணங்கள்
எப்போதுமே ஒரேமாதிரி
இருப்பதுமில்லை ..
கோபத்தின் நிறம் சிவப்பு
ஒரு நேரம் ..
வெண்ணிறமாக வெளியில் தெரிய
உள்ளே புகையும் அதன்நிறமோ
பழுப்பாகவும் இருக்கலாம் ..
கறுப்பாகவும் இருக்கலாம்..
இப்படித்தான் போகிறது
உணர்வுகளின் குணங்கள்..நிறங்கள்..
எப்படியோ..
உணர்வுகள் எவற்றுக்கும்
இன்னொரு உணர்வு
நிவாரணி ஆவதில்லை உண்மையில் ..
அதனால்தான் தோன்றுகிறது
உணர்வுகள்..
தனித்துவம் மிக்கவை..அவை
மகத்துவமானவையாக தான்
இருக்க வேண்டும்
என்பது ஏகாதிபத்திய சிந்தனை!