கவிதை
காலம்காலமாய்
காவியங்களும் கவிதைகளும்
பாடியாயிற்று காதலை
இனி
விதையென முட்டி முளைக்குமொரு
விடியலுக்காக
கண்ணீரை துடைக்குமொரு விரலாய்
ஆறுதல் தேடும் விழிகளுக்காக
வழிகள்தோறும் வாங்கிய வலிகள் தீர்க்க
மயில் தோகை வருடலுக்காய்
ஏங்கும் உயிர்களுக்காக ,அன்றி
காதலை கசிந்துருகுவதில்
களிப்பில்லை எனக்கு...
வாழ்க்கை...
கண்ணெதிரே பரந்து கிடைக்கும்
மேடு பள்ளம் நிறைந்த
மணற்பரப்பு ...
லட்சம் கோடி
காலடி தடங்களின் நடுவே
தேடி செல்கிறேன்
என் பாதையை...
நமக்கான நமது புன்னகை
சந்தோஷமென்றால்
பிறருக்காக அழுகிற துளியும்
ஆனந்தமே!
ஆதலால்
சுயலமிக்க
காதலை கசிந்துருகுவதில்
களிப்பில்லை எனக்கு...
உனக்கும் தான் நண்பா..!
புறப்படு
இன்னுமொரு வானம்
புதியதொரு பூமி
புழுதியற்ற காற்று
இவற்றை
கவிதைகொண்டு செய்!
பெண்ணின் படம் வரைந்து
பாகம் குறித்தது போதும்!
மீண்டு வா....
மீண்டும் வா....
விதையென முட்டி முளைக்குமொரு
விடியலுக்காக
கண்ணீரை துடைக்குமொரு விரலாய்
ஆறுதல் தேடும் விழிகளுக்காக
வழிகள்தோறும் வாங்கிய வலிகள் தீர்க்க
மயில் தோகை வருடலுக்காய்
ஏங்கும் உயிர்களுக்காக ,
எழுது
உன்னுயிர் சுடும்
கவிதையை....