காதல்
விழிவழி வந்திடும் காதல் மொழி –உனைப்
பிணைத்திட வைத்திடும் காதல் பிணி
உள்ளத்தை உள்ளத்தால் கண்டு பிடி –அது
உண்மைக் காதலா என்றே படி !
தூக்கம் கெடுக்கும் உணர்வைக் கொடுக்கும்-ஒரு
ஏக்கம் நெஞ்சில் எழுந்திட வைக்கும்
எங்கும் எதிலும் ஆர்வம் தொலலைக்கும் –உன்
சிந்தை தனையே பிடித்து அலைக்கும்.!
காரணம் இன்றியே சிரித்திடச் செய்யும்-ஒரு
சாரல் மழையாய் சிலிர்த்திடப் பெய்யும்
பார்க்கும் எதிலும் எழில்முகம் தோன்றும்-தினம்
பார்த்திடு பார்த்திடு என்றே தூண்டும் !
பித்தாய் நெஞ்சை பற்றியே கொள்ளும்-உனை
நித்தமும் நினைத்திட வைத்தே கொல்லும்
உறவுகள் யாவையும் ஒதுக்கிடச் சொல்லும்-அந்த
உறுதியில் உன்னையும் என்றுமே வெல்லும். !