பாவாடை தாவணியில்

பாவாடை தாவணியில் பாவை வந்தாள்
***பார்வையினால் என்மனதைப் பக்கம் ஈர்த்தாள் !
ஆவாரம் பூவாக அழகாய்ப் பூத்து
***ஆசையுடன் அகங்குளிர அன்பைச் சொன்னாள் !
தேவாவின் மெல்லிசையாய்த் தென்றல் வீசத்
***தேவதையாள் மெய்சிலிர்த்துச் சிலையாய் நின்றாள் !
தூவானம் மேனிதொட சொக்கிப் போன
***தூயவளின் அரவணைப்பில் சொர்க்கம் கண்டேன் !
நாலாறு வயதினிலே நலங்கு காண
***நளினமுடன் நடைபழகி நங்கை வந்தாள் !
சேலாடும் விழிகளிலே சேதி சொல்லி
***செவ்விதழால் தித்திக்க முத்தம் தந்தாள் !
தாலாட்டுப் பாடியவள் தாயாய் மாறி
***தலைகோதும் விரல்களினால் தாள மிட்டாள் !
மேலாடைக் காற்றாட வெட்கம் தின்ன
***மெல்லிடையாள் புன்சிரிப்பில் மின்னல் கண்டேன் !
ஏகாந்த வேளைதனில் ஏக்கம் தீர்க்க
***எழில்கொஞ்சும் இளமையுடன் இன்பம் தந்தாள் !
பாகாக உருகியவள் பரிவாய்ப் பேசி
***பாங்குடனே உள்ளத்தில் பாசம் கொண்டாள் !
நோகாமல் நானிலத்தில் நோயு மின்றி
***நூறாண்டு நான்வாழ நோன்பு நோற்றாள் !
ஆகாய விண்மீனாய் ஆட்சி செய்தே
*** ஆதரவு காட்டியதில் அன்னை கண்டேன் !