ஏக்கம்
சித்தம் முழுதும் கல்யாண கனவுகள்...
முத்தம் பதிக்குதே பெண்ணின் மனதிலே...
நித்தம் தொடரும் ஏமாற்றும் பொழுதுகள்...
யுத்தம் நடத்துதே கன்னியின் நெஞ்சிலே.......
வரன்ததேடி வந்தப் பேராசைப் பறவைகள்...
வரத்தில் குறைவென்று வெறுத்துப் பறந்ததே...
பொருள் நிறைந்த கவிதை ஒன்று
பொருள் இல்லாது மணக்காமல் போனதே......
உதிர்ந்து விழுகின்ற பூக்களோ?... சிரிக்கின்றது...
மாலையில் சேராவிட்டால் மண்ணிலே மரணமென்று...
முதிர்ந்து அழுகின்ற மங்கையோ?... கழுத்தை
உதிர்த்திட நினைத்தாலும் உள்ளம்வழி மறிக்கின்றதே......
காத்துக் கொண்டே இருக்கின்றாள் ஏக்கத்தில்
காற்றும் இவளை தீண்ட மறுக்கின்றதே...
பூத்துவிட்ட மலரிவள் காய்த்திடாதோ?... ஏக்கத்தில்
பெற்றெடுத்த இதயம் கண்ணீர் வடிக்கின்றதே......
மனம் விரும்பும் மன்னவன் வருவானென்று
வானம் பார்க்கும் வறண்ட நிலமாய்
மான்விழியால் பாதைகள் பார்க்கும் பெண்களின்
வேதனையை என்றுதான் தீர்ப்பாயோ?... இறைவனே......