போறாயோ என் மகளே

அய்யய்யோ என் மகளே
நான் பெத்த ரத்தினமே
ஓயாத சிற்றலையே
ஓய்ந்ததென்ன என் அழகே

தாமரைப் பூ போன்றவளே
என் தாய் போல பிறந்தவளே
வற்றாத பாற்கடலே
வற்றிவிட்ட மாயமென்ன

என் செல்வம் கூடுமென்று
மாயாண்டி ரேகை பார்த்து
ரகசியமாய்ச் சொன்னானே
என் சொத்து பாழ்கிணற்றில் பொணமாக மிதந்ததென்ன

பச்சரிசி கஞ்சி வெச்சு
நேத்துதான் கேட்டாயே
உன் நாவுக்கு விருந்து வைக்க
இப்பாவி மறந்ததென்ன

என் வயிற்றில் பிறந்தவளே
என் மடியில் தவழ்ந்தவளே
பாழ் கிணற்றில் மிதக்கத்தான்
பாலூட்டி வளர்த்தேனா

உன் பருவம் திறந்ததுமே
ஊர்க்கூட்டி விருந்து விருந்து வைக்க
பெருங்கணக்கு போட்டோமே
அத்தணையும் இன்னக்கி
மண்மடிஞ்சு போவதர்க்கா

எண்பது வயசிலயும்
தெம்பாக நிக்குறாங்க
எட்டு வயசுச்செடி
திசையிழந்து போயிடுச்சே

ஊரோரம் இருந்தாலும்
ஊர்த்தாகம் தீர்த்த கேணி
பாழ் விழுந்து போனதனால்
என் மகள பறிச்சிடுச்சே

என்கால சுத்திக்கிட்டே
கேள்வியெல்லாம் கேட்பாயே
வாய்மூடி துடிப்பின்றி
என் முன்னே கிடக்குறியே

பத்து பதினைந்து பெத்தவள உட்டுப்புட்டு - சாமி
ஒரு பிள்ள பெத்தவள
உசுரோட கிழிக்குறியே

என்ன நடக்குதிங்க
மலர் போல படுப்பவள
எதற்காக தூக்குறிங்க

என் கண்ணோட கலந்தவள
என் நெஞ்சோட நெறஞ்சவள
கடைசியாப் பாருன்னு
எதற்காக சொல்லுறிங்க

ஓ! பச்ச உடலெரிக்க
சுடுகாடு புறப்படவா
தேன் மலரின் செவியெல்லாம் சங்கூதக் கேட்பதற்கா

வேணாம் விட்டுடுங்க
என் மகள தந்திடுங்க
தூங்குறவ தூங்கட்டும்
காவலுக்கு நானிருக்கன்
புண்ணியமா போகட்டும்

விதிவிட்ட கோட்டுவழி
சுடுகாட்டு திடல்வெளிக்கு
போறாயோ என் மகளே
உன் தாயை தவிக்க விட்டு...
***
.
-முஹம்மது பர்ஸான்.

எழுதியவர் : முஹம்மது பர்ஸான் (3-Sep-16, 3:51 pm)
பார்வை : 425

மேலே