தலைவிதியும் மாறும்
=======================
வாழ்வதற்கு பூமியிலே வழிகளென்று பலவும்
வைத்தேதான் படைத்திருக்கான் கடவுள் – நீதான்
வீழ்வதற்கு என்றுசொல்லி விதிவசத்தை நம்பி
வீட்டுக்குள் முடங்குவதோ மடமை .
பூட்டிவைத்த சன்னலுக்குள் புகுந்திடாதக் காற்று
புழுக்கத்தை தரக்கூடும் வீட்டில் – நீதான்
நாட்டிவிடு காற்றுக்காய் நற்கன்று மக்கள்
நற்பயனைப் பெறக்கூடும் நாட்டில்.
முயற்சியதன் காலொடித்து மூலையிலே போட்டு
முடங்குவதில் கிடைப்பதில்லை வெற்றி – நித்தம்
பயிற்சிகளின் மூலமதை படிப்படியாய் அடையும்
பக்குவத்திற் கில்லையொரு தோல்வி
எடுத்தவுடன் சிகரத்தில் ஏறிவிட எண்ணும்
எண்ணத்தில் பூக்கின்ற இச்சை – உன்னைக்
கெடுத்துவிடும் என்பதனால் கிரமமாக செய்ய
கிரகிக்கும் போதிலில்லை அச்சம்.
கடித்துவிடும் என்றறிந்தும் கடைத்தெருவில் நாய்முன்
காலெடுத்து நீநடக்க லாமோ – பின்னர்
துடித்துஅழும் நிலைசூழ துயர்கொண்டு வாடி
தொந்தரவே வாழ்வென்ப தாமோ?
படித்துவிடும் புத்தகத்துப் பாடமெல்லாம் வாழ்வில்
பயன்கொடுக்கும் என்றெண்ணிக் கொண்டு – உலகைப்
படிக்காமல் இருந்துவிட்டால் பயனில்லை என்னும்
பாடத்தைக் கற்றுவிடு நன்று
முடியுமென்னும் துணிவோடு முயற்சிசெய் நீதான்
முன்னேற்றம் வாழ்வினிலே சேரும் – வீணே
துடிப்பதனை விட்டுவிட்டு தொடங்கிவிடு பயணம்
துன்பமென்றத் தலைவிதியும் மாறும்
*மெய்யன் நடராஜ்