ஆசிரியர் நமக்கு ஆல் ======================

நற்றமிழி னற்புதத்தை நன்கறிந்து கொள்வதற்குக்
கற்றுத் தருமாசான் காட்டுகின்ற – சொற்சுவையை
உற்றுப் படித்துயர்ந்த ஒவ்வொருவர் வாழ்விலும்
சுற்றுகின்ற கல்விச் சுடர்.
சுடரென்னும் கல்விதனை சொத்தாய் அளித்து
படரும் கொடிக்கான பந்தல் திடலாய்
அறிவுப்பூ பூத்து அழகுக்காய்க் காய்க்க
நெறிபடுத்து மாசான் நிழல்
பொற்கொல்லர் தீயில் புடம்போட்டுத் தங்கத்தை
அற்புத ஆபரணம் ஆக்குவதாய் – விற்பன்னர்
என்றெமை யாக்கிவைக்கும் வேந்தராம் ஆசிரியர்
அன்பொன்றே ஆசி எமக்கு .
சிற்பியின் கைகொண்டச் சிற்றுளி செய்வித்தக்
கற்சிலை காட்டும் கலைவண்ண - அற்புதத்தை
ஒத்ததாய் எம்மை உருவாக்கும் மேலான
அத்யா பகரெமக்கு ஆல்.
*மெய்யன் நடராஜ்