வாராயோ !!!

பட்டுப் போன மரங்களெல்லாம்
பச்சையாய்த் தழைக்கட்டும்
பாடித் திரியும் பட்சிகள்
கூடு கட்டிப் பிழைக்கட்டும் !!!

வெயிலேறி வெடித்த தரையெல்லாம்
நீரேறி நெருக்கமாய் ஒட்டட்டும்
கலைந்த மேகங்கள் சேர
வான முரசு கொட்டட்டும் !!!

வானிருந்து பூமிக்கு
அதிசய தொங்கு பாலம் தொங்கட்டும்
காடு செழிக்க நாடு கொழிக்க
விவசாயி மனம் பொங்கட்டும் !!!

வற்றிப் போன குளமெல்லாம்
வயிறு வீங்கி நிறையட்டும்
தண்ணீர்த் தவளைகள்
தொண்டை வீங்க இரையட்டும் !!!

ஏமாற்றிப் பிழைக்கும் "ரியல்" எஸ்டேட்காரர்கள் வேலையின்றி அலையட்டும்
வீடுகளுக்காய் விலை போகும்
விவசாய நிலம் தப்பட்டும் !!!

சீர் மிகு தொழிலான
ஏர் பிடி தொழில்
எங்கும் பரவட்டும் !!!
சிட்டு குருவிகளின்
சிருங்காரம் கேட்கட்டும் !!!
ஆனந்த வாழ்க்கையை
அவசர வாழ்க்கையாக்கி விட்ட
தொழில் நுட்பங்களின் வளர்ச்சி
இதோடு போகட்டும் !!!

நிர்வாணமாக்கப் பட்ட
பூமித் தாய்
பச்சையாடை உடுத்தட்டும்
மக்கள் மகிழ
இயற்கை செழிக்கட்டும் !!!

இத்தனையும் நிகழ
நீ வேண்டும்
ஆண்டவர் படைத்த
அற்புத மழையே
நீ வேண்டும் !!!
மீண்டும் மீண்டும்
நீ வேண்டும் !!!

எங்கே போய்விட்டாய்
எங்கள் பூமி விட்டு
எந்தக் கிரகம் போய் விட்டாய் !!!

பாழாய்ப் போன பணமோ
மனிதனுக்கு மட்டுந்தான்
எல்லா உயிர்களும் ஏற்றம் பெற
நீ மட்டுந்தான் !!!

வற்றிய நாக்கோடு
வாய் வெடித்துக் கிடக்கும்
பூமியின் தாகம் தீர்க்க
வற்றிய வயிறோடு
கால் வெடிக்க நடக்கும்
விவசாயி சோகம் தீர்க்க
எல்லாரும் மகிழ
எல்லாமும் மகிழ
எப்போதும் மகிழ
வாராயோ வானம் பெற்றெடுத்த
வனப்பு மிகு மழைப் பெண்ணே !!!

மட்டுமா
நான் வந்து நனைய
நல்லதொரு மழையே
நாளைக்கே வாராயோ !!!


எழுதியவர் : சலோப்ரியன் (28-Jun-11, 8:12 pm)
பார்வை : 444

மேலே