ஒலிம்பிக்

==========
வீரர்தமை விலைக்கு வாங்கும்
வீரம் படைத்த வீராதி வீரர்கள்
வெற்றிவாகை சூடி வீறுநடை போட
வெறுங்கையோடு திரும்பிவந்த என்
வீரனே.. உனக்காக நான்
விரிக்கிறேன் வரவேற்புக் கம்பளம்
திறமைசாலிகளை தேடி எடுத்துத்
தகுந்த மரியாதை செய்யும்
திறமையில்லாத தேர்வாளர்களால்
தேசத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்
தங்கப்பதக்கம் .. ஆனால் நீயுன்
திறமையை காட்டித் தோற்றதில்
கிடைத்ததே தன்மானப் பதக்கம்
திறமைசாலிகளை விலைக்கு வாங்கும்
திறமைமிக்கத் தேசத்திற்கு
விலைபோகாத உன் திறமை அது
புடம் போடாதத் தங்கம்
திறமைமிக்க விளையாட்டு வீரர்களை
தேர்ந்தெடுக்கும் விளையாட்டில்
விளையாடப் பட்டிருக்கலாம்
உண்மையான விளையாட்டு வீரன்
ஒதுக்கப்படுகின்ற உண்மை வீரன்
மனம் வெறுக்கப்படுகிற வேளை
யாருடைய கற்பனையிலோ
செதுக்கப்பட்டவனாகி விடுவதால்
வீரத்தை விற்று வெற்றி கொள்கிறான்
வேறொரு தேசத்தின் விசுவாசியாய்..
இல்லாமைகளை சூடிக்கொள்கின்ற
ஏழைக்கு உற்சாகம் கொடுத்து
ஊக்கப்படுத்தும் ஒரு தேசத்தில்
உருவாகும் வீரன் ஒலிம்பிக்கில்
எழும்பிநின்று காக்கின்ற மானத்தில்
இருப்பது தேசத்தின் வரலாறு.
நேற்றைய கறைகள் நேற்றோடு மறையட்டும்
நாளைய ஒலிம்பிக் நடக்கும்
ஜப்பானில் இனி நிலம் நடுங்கட்டும்
அது நம்மவரின் வெற்றி
கொண்டாட்ட அதிர்வாய் !
*மெய்யன் நடராஜ்
******************************************