ஒத்தப் பாட்டு

ஏரெடுத்து எட்டு வெச்சி
தூரயிருக்கும் வயலுக்கு
வெரவா போறவரே..!
கிட்டேயே உருகி கெடக்கும்
கட்டழகு கன்னியென்ன- ஏறெடுத்து
பாக்காமப் போறீயரே..!
ஒழுங்கா நாத்து நடும்
கைகள கங்காணிக்க
காலயிலப் போறவரே...!
கண்ணுல ஒம்ம வச்சி
கண்ணு மூடாம கெடக்கும்
கன்னிமயில காணாமக் கடக்கிறீரே...!
வரப்பு ஒடயாம
வயலுக்கு நீரு நெரப்பும்
நல்லவரே ... வல்லவரே..!
எம்மனசு ஒடிஞ்சி
நொடிஞ்சிக் கெடக்கேனே
ஒட்டாத மாதிப் போறீயரே...!
நஞ்செயிலெ தெரியற
கொஞ்சமுள்ள களைய
களய வெரஞ்சிப் போறவரே..!
நெஞ்செல்லாம் ஒம்ம வெச்சி
ஓயாம கொஞ்சற என்ன
நஞ்சாப் பாக்கிறியரே...!
நட்ட நாத்து எல்லாம்
நல்ல மணியா வெளஞ்சி
கதிரறுக்க காத்திருக்கீரே..!
காத்துக்கெடக்கும் என்னெ
கொட்டடிச்சி வந்து
எப்பதான் கைப்பிடிப்பீரோ....?
கைப்பிடிச்சி கைவளச்சி
எங்கழுத்தில மஞ்சக்கயறு
நீருந்தான் கட்டாட்டா...
ஒட்டாத உமி போல
என்னுசிரும் என்கட்டயில
ஒட்டாமப் போயிடும்.
உசிரெத்தான் பிடிச்சி
வச்சிருக்கேன் கயத்துக்காக...
வெரஞ்சி வருவீகளா...?