தூரிகைகளோடு

தூரிகைகளோடு பேசிப்பேசி
சில ஓவியங்களை வரைய முற்பட்டேன்
நீண்டுகொண்டே போனது
முடிவடையா கவிதையென

வண்ணங்கள் முகங்களென மாறி பின்
உணர்சிகளை குழைத்து தெளித்தபின்
பயங்கொள்ள வைக்கிறது...
பொய் முகம் பூசி நடிக்கும் மனிதர்கள்
புழுக்களென நெளிகிறார்கள் ஓவியமெங்கும்
வரைந்தபின் தூரிகையை தூக்கியெறிந்தேன்
விழுந்த இடமெங்கும் வக்கிர மனிதர்கள்


புள்ளிகள் சில வைத்து சேர்த்து சேர்த்து
நீ வரையும் கோலங்கள் என்
ஓவியத்தை பரிகசிக்கும் முதல் ரசிகனெனமாறி...

ஒரு முறைகளற்ற கோடுகள் நீண்டு நெளிந்து-பின்
பாம்புகளாய் மாறி காடுகள் தேட
வீடுகள் அழித்து காடாக்கினேன்
பறவைகளும் பெருகின -மழை பொழிய
சந்தனச் சருகுகளின் வாசனை ஓவியமெங்கும்

உன் பாடலை உன் இசையை-என்
தூரிகைகள் பிரளய வெடிப்பாய் வெளிபடுத்தும்-பின்
ஓவியம் நடனமாடியது உன் இசைக்கேற்ப...
தெருவெங்கும் நீண்டு கிடக்கிறார்கள்
தெய்வங்கள் சில நூறு பைசாக்களை மட்டும்
சம்பாதித்துக் கொடுத்து பின்
மழைத்தூரலுக்கோ வாகன டயர் தேய்தலுக்கோ
அழிந்தும் போகிறார்கள்...

இன்னும் வரையப்படவேயில்லை தீண்டாமையையும்
சாதிய வன்கொடுமைகளையும்-
ஒருவேளை அவை ஓட்டுகளின் சாட்சியங்களாகவோ -
அல்லது நீதிதேவதையின் தராசுகளில் வீசப்பட்ட
காசுகளாகவோ கூட காட்சிப்படுத்தப்படலாம்
பின் நவீனத்துவ ஓவியமென பரிகசிக்கவும்- பின்
மறந்துபோகவும் கூடும் அவை...

எழுதியவர் : ரிஷிசேது (10-Sep-16, 11:43 am)
பார்வை : 82

மேலே