காண்பதெல்லாம் மெய்யா பொய்யா
அந்த அழகிய பச்சை இரட்டை குன்றுகளுக்கு பின்னே
மேல் திசையிலே ஆதவன் மெல்ல இறங்கக் கண்டேன்
கருமேக திரை ஒன்று ஆதவன் முன்னே வந்தடைந்தது
திரை இப்போது மூடிக் கொண்டது
இதமான தென்றலோடு லேசான மழை திரைமுன்னே வீழ
இரட்டை வான வில் கண்ணைப் பறிக்கும் அழகோடு
கீழ் வானில் தோன்றி நின்றன
ஒரு வானவில் பெரிதாய் முழுதாய் விண்ணை மண்ணை
கட்டி அணைத்தால் போல் ,மற்றோன்று சிறிதாய்
ஆனால் பேர் எழிலாய் பெரிதின் பின்னே
ஆண் களிரை பின் தொடரும் பெண் யானைப் போலே
இல்லை வில் ஏந்தி செல்லும் காமனுக்கு
வில் ஏந்தி செல்லும் ரதி போல காட்சி தந்திட
மகிழ்ச்சியின் எல்லையில் சற்றே கண் மூடி திறந்தேன்
இப்போது கதிரவன் மறைந்தே பொய் விட்டான்
மேகத்திரையும் காணவில்லை
மன்மதன்-ரதியாய் எழிலாய் வந்த வான விற்களும்
காண வில்லை
காண்பெதெல்லாம் கூட மறைந்து பொய்த்து போகின்றனவே