கருவாட்டுப் பாலாணம் - நகைச்சுவை

=======================
வருமான மில்லாத வைத்திய ராகிக்
கருவாடாய்க் காய்ந்து கிடந்த – தொருகாலம்
வாழ்வைக் கடத்துதற்கு வைத்தேன் உணவகம்
பாழ்தான் அதிலும் எனக்கு.
சுத்த சைவமென்று சொல்லும் உணவகத்தில்
மெத்தக் கவனமுடன் மெல்லுதற்கு – வத்தக்
கறிக்குழம்பு வைத்தே பரிமாற்றம் செய்தும்
அறியாதோர் போனார் அகன்று
ஏதேனும் வித்தியாசம் ஏற்படுத்தி விட்டாலே
நூதனமாய் ஓங்கும் வியாபாரம்; – தோதாக
ஒருவழி யோசித்த ஒர்நாழி வந்த
கருவாட்டுப் பாலாணம் காண்
பிட்டு இடியப்பம் பாணும் பிசைந்துண்ண
மட்டுமல்ல பாலாணத் துள்ளேயோர் – கட்டாக்
கருவாட்டைப் போட்டுக் கடைந்தெடுக்க மக்கள்
விருப்பும் குழம்பாய் அது
பால்நழுவி வாழைப் பழத்தில் விழும்சுவை
போல்வழியும் பாலாணம் தேடிவரும் – நூல்கொண்டு
இடைசெய்த நேரிழையர் இல்லத் துணவை
தடைசெய்து விட்ட சுவை.
உண்டிச் சுருங்காதப் உள்ளூரின் அன்புமிக்க
பெண்டிர் உடல்பெருத்து பேரேக்கம் –கொண்டலைந்து
கண்டீரோ மேனி இளைக்க மருந்தென்றே
நொண்டி அடிக்கும் நிலை.
நாட்கணக்கில் பாலாணம் நாடி வருகின்ற
ஆட்கள் தொகைக்கூடி அங்கலாய்க்க – தீட்டியத்
திட்டம் தெருவில் கிடந்தவனுக்கு மும்மாடிக்
கட்டிடம் கட்டும் பணம்.
கீழ்மாடி பாலாணம் கேட்டு வருவோர்க்கு
தாழ்பணிந்தே ஊட்டும் உணவிருக்க – யாழ்மீட்டும்
மேல்மாடி சாப்பிட்டு மேனி பருத்ததால்
நூலிடை கேட்போர் மருந்து.
திரண்டு வருகின்ற வாடிக்கை யாளர்
மிரண்டு விடவைக்க இன்று – இரண்டு
வருமானம் ஈட்ட அடித்தளம் தந்த
கருவாட்டுப் பாலாண மே!
உணவகத்தில் சற்று வருமானம் குன்றின்
சுணங்காமல் ஊட்டும் பசிமருந்து – மணமுள்ள
நோயாளர் நேரே கருவாட்டுப் பாலண
நேயராய் ஆவர் நிலைத்து
அதுபோலே வைத்தியத்தில் குன்றும் பொழுது
மெதுவாய் பழையப்பா லாணம் – பொதுவாய்
வயிற்று வலிகொடுக்க வென்று இருக்க
உயிர்வாழு தெந்தன் பிழைப்பு.
கருவாட்டுப் பாலாணம் கண்கண்ட தெய்வம்
உருவாக்கி விட்டதென்னை இன்று – திருவோடு
ஏந்தி தெருவோடு நில்லா நிலைசெய்து
சாந்தி வழங்கும் சமைப்பு.
*மெய்யன் நடராஜ் .