பெங்களூர் கலவரத்தின் பயங்கர பின்னணி நடந்தது கொள்ளை
போலீ்ஸ் கையில் திடுக் ஆதாரம்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில் இதுகுறித்து மிகப்பெரும் திருப்பமாக போலீசாரிடம் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன
நடந்தது காவிரிக்கான போராட்டம் கிடையாது, அது மிகப்பெரும் கொள்ளை.. என்கிறது இந்த ஆதாரங்கள். ஆம்.. கடைகள், நிறுவனங்களை எரிக்காமல் விட வேண்டுமானால் ரூ.2 லட்சம் வரை தர வேண்டும் என அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கும்பல் பேரம் பேசியுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது
கலவரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோத கும்பல்கள், இதை பணம் சம்பாதிப்பதற்கும், தங்கள் பகையை தீர்த்துக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
நாளிதழ் செய்தி
கர்நாடகாவில் விற்பனையில் நம்பர்-1-ஆக உள்ள நாளிதழ் 'விஜய் கர்நாடகா' இந்த திடுக்கிடும் தகவல்களை ஆதாரத்தோடு வெளியிட்டு காவிரி கலவரத்தின் பின்னணியிலுள்ள 'காணாத கைகளை' அம்பலப்படுத்தியுள்ளது. அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தை நீங்களே பாருங்கள்.
சமூக விரோத கும்பல்
கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த திங்கள்கிழமை கலவரத்தின்போது பெங்களூர் நகர வீதிகளில் சுற்றியுள்ளது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதை பார்த்த நகர குற்றப்பிரிவு போலீசார் அதிர்ந்துபோயுள்ளனர்.
கன்னட போராட்டக்காரர்கள் கையில் கத்தி எதற்கு என்பது அவர்கள் கேள்வி. சிசிடிவி காட்சிகளில் உள்ளவர்கள் ரவுடிகள் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொள்ளை, தனிப்பட்ட விரோதம்
சமூக விரோதிகளின் நோக்கம், கொள்ளை மற்றும் தனிப்பட்ட விரோதத்தை தீர்ப்பது மட்டுமே. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள், உரிமையாளர் முன்னிலையில் அவரது ஆட்டோவை தீ வைத்து எரித்த்துள்ளனர். பின்னர், அவரிடம், பிற பொருட்களையும், கடையையும் எரிக்காமல் இருக்க பணம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளனர்.
ரூ.2 லட்சம் பேரம்
நிறுவன உரிமையாளர் ஒரு வழியாக ரூ.2 லட்சம் தர ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு கலவர கும்பல் அமைதியாக வெளியேறுகிறது. இந்த காட்சிகள் நிறுவன சிசிடிவி காட்சிகளில் அப்பட்டமாக பதிவாகியுள்ளது. இதுவும் போலீஸ் கைக்கு சேர்ந்துள்ளது.
மசாலா பார்சல்
கிரிநகர் பகுதியிலுள்ளது ஏ.வி.மசாலா புட்ஸ் பிரைவேட் லிமிட்டட். இந்த நிறுவனத்திற்குள் 200 பேர் கொண்ட கும்பல் நுழைந்து தீ வைத்துள்ளது. மசாலா நிறுவனத்திற்குள் இருந்த மசாலா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னணியில் தனிப்பட்ட விரோதமும் உள்ளதாம்.
விநாயகர் சதுர்த்தி வசூல்
விநாயகர் சதுர்த்தியின்போது, பெங்களூரில் ஆங்காங்கு இளைஞர்கள் கூட்டம், கணபதி சிலையை வைத்து பூஜை செய்து கரைக்க செல்வது வழக்கம். தங்கள் செல்வாக்கை காட்ட, லோக்கல் எம்எல்ஏ அல்லது அமைச்சர்களை பூஜை நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவார்கள். கச்சேரிகள் நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவை, அங்கு தொழில் நடத்தும் நிறுவனங்களிடமிருந்தே வசூலிப்பார்கள். வீட்டு உரிமையாளர்களிடமும் கணிசமாக வசூலிப்பார்கள்.
கம்மி பணம், ரொம்ப கோபம்
இதேபோல ஏ.வி.மசாலா நிறுவன உரிமையாளரிடம், கணபதி விழாவுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை கேட்டுள்ளது அங்குள்ள லோக்கல் இளைஞர் குழு. அவர் சிறிதளவே பணம் கொடுத்துள்ளார். எனவே காவிரி கலாட்டாவை காரணம் காட்டி அந்த நிறுவனத்தை கும்பல் சூறையாடியுள்ளது.
குண்டர் சட்டம் பாயும்
சிசிடிவி காட்சிகள், டிவி சேனல் காட்சிகள், பத்திரிகை புகைப்படங்கள், சமூக வலைத்தள காட்சிகளை கொண்டு கிரிமினல்களை அடையாளம் கண்டு கைது செய்துவருகிறது போலீஸ். பல கிரிமினல்கள், திங்கள்கிழமை இரவே வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு குண்டர் சட்டத்தை பாய்க்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு விவரிக்கிறது அந்த செய்தி.