அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே - நேரிசை வெண்பாக்கள்

நண்பர் கவின் சாரலன் அவரது புதுக்கவிதையை பல விகற்ப இன்னிசை வெண்பாவாய்ப் புனைந்திருந்தார். அதை நேரிசை வெண்பாவாக ஆக்க நான் முயற்சித்ததில் சில அமைந்தன.

பல விகற்ப இன்னிசை வெண்பா

பூவில் அவள்மல்லி கைபொய்யில் என்கவிதை
சத்தியமாய் இன்னுமவள் என்கா தலியில்லை
சாயந் திரப்பரீட்சை தன்னில்நண் பர்களே
நானின்னும் தேறவில் லை. – கவின் சாரலன்

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

பூவில் அவள்மல்லி கைபொய்யில் என்கவிதை
நாவினிக்க இன்னுமவள் நானழைக்கும் - தேவியில்லை
சாயந் திரப்பரீட்சை தன்னில்நண் பர்களே!
ஐய!நான் தேறவில் லை! 1

பூவிலவள் மல்லிகை; பொய்யிலே என்கவிதை;
நாவினிக்க இன்னுமவள் நானழைக்கும் – தேவியில்லை;
சாயந் திரப்பரீட்சை தன்னில்நண் பர்களே!
ஐய!நான் தேறவில் லை! 2

பூவிலவள் மல்லிகை; பொய்யிலே என்கவிதை;
நாவினிக்க இன்னுமவள் நானழைக்கும் – தேவியில்லை;
சாயந்தி ரத்தேர்வில் சத்தியமாய் நண்பனே!
ஐய!நான் தேறவில் லை! 3 வ.க.கன்னியப்பன்

ஆதாரம்: கவின் சாரலனின் 'சாயந்திரப் பரிட்சை' பலவிகற்ப இன்னிசை வெண்பா.

அத்துடன் இன்னும் வேறு மூன்று நேரிசை வெண்பாக்களும் பதிவு செய்திருக்கிறேன்.

பாங்காக நம்மினிய பாவனா தானிருக்க
போங்காக ஓர்வேற்றுப் பாவனையில் - ஆங்கில
வெள்ளெலி போன்ற வெளுத்த முகமெதற்கு?
வெள்ளிபோல் பாவனாவே மேல்! 4

அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே!
இந்தநாள் அன்றுபோல் இல்லையே - விந்தைதான்
நண்பனே! நண்பனே!! நண்பனே!!! உன்னையென்
கண்ணெனக் கொள்வேன் இனிது! 5

பாராட்டு நல்கிடும் பண்பாளர் நட்புகொள்
தாராள மாண்புடைய தன்மையராம் - சீராளர்
டாக்டர். ஹரிபாபு நட்பினிதி லக்கணத்தின்
ஆக்கம் அவர்தம் சிறப்பு! 6

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

அருமையான ஓர்விகற்ப இன்னிசை வெண்பா
தரும்மதுரை பாபாராஜ் தானே - பொருளும்
கருத்தும் அறவுரையும் காண்கின்ற பாக்கள்
பெருமளவில் நல்கிடுவார் பார்! 1

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-16, 10:34 am)
பார்வை : 237

மேலே