ஸ்ட்ரோக் யாருக்கு வரும்
யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனினும், ஸ்ட்ரோக் ஏற்பட ஆறு முக்கியமான காரணிகளைச் சொல்ல முடியும்.
உயர் ரத்த அழுத்தம்:
உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அழுத்தம் அதிகரிக்கும்போது, அவை சுருங்கும். ரத்தக் குழாய் சுருங்கும்போது, மூளைக்கு ரத்தம் செல்வது, படிப்படியாகத் தடைப்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
டயாபடீஸ்:
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாய்களில் இருக்கும் புரதங்களால் ஆன அடுக்கு பாதிப்படையும். இதனால், குளுக்கோஸ், சிறுசிறு கொழுப்புக்கட்டிகள்போல, ரத்தக் குழாய்களில் படியும். இந்தக் கொழுப்புக்கட்டிகள் காரணமாக, கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
கொலஸ்ட்ரால்:
ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அடைப்பை ஏற்படுத்தலாம்.
புகைபிடிப்பவர்கள்:
நிக்கோட்டின் ரத்தக் குழாயில் படியும்போது, அவை, ரத்தக் குழாய்களில் விரிசலை ஏற்படுத்தும். விரிசலில், ரத்தத் தட்டணுக்கள் ஆங்காங்கே ஒட்டிக்கொள்ளும். இதனாலும் அடைப்பு ஏற்படலாம்.
ஆல்கஹால்:
மது அருந்துபவர்களுக்கு, மேற்சொன்ன நான்கு வகையிலும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
மரபியல் காரணி:
பரம்பரையில் யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால், கவனமாக இருக்க வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்பட, மரபியல்ரீதியான வாய்ப்புகளும் அதிகம்.
ரத்தக் குழாய் அடைப்பு (Ischemic stroke)
கழுத்தில் இருந்து முன்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும், பின்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும் மூளைக்குச் செல்கின்றன. இந்த நான்கு ரத்தக் குழாய்களும் மூளைப்பகுதியில் சந்தித்துப் பிரியும்.
இதயம் ஒழுங்கின்றி திடீரென வேகமாகத் துடிக்கும் பிரச்னையான ரூமாட்டிக் இதய நோய் உள்ளவர்களுக்கு, இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் முன்பக்க ரத்தக் குழாய்களிலும், மூளைக்கு உட்புறமாகச் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்களிலும் கொழுப்புகள் படிந்து, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
ரத்தக்கசிவு ஸ்ட்ரோக் (Hemorrhagic Stroke)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்தம் கசிவதாலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதில் இரண்டு வகை உள்ளன.
வயதானவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் மூளைக்கு உள்ளே செல்லும் ரத்தக் குழாய்களில் கீறல் விழுந்து, ரத்தக் குழாய் வெடித்து, ரத்தம் கசியும். பெரும்பாலும், மூளையில் உள்ள பேசல் காங்கிலியா (Basal ganglia) செரபெல்லம், பான்ஸ் பகுதிகளில் இருக்கும் ரத்தக் குழாய்களில் இத்தகையக் கசிவு ஏற்படலாம்.
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பலூன் போல வீக்கம் ஏற்பட்டு, பின்னர் ரத்தக் குழாய்கள் வெடிப்பதாலும், ரத்தம் கசிந்து, மூளைக்கு ரத்தம் செல்லாமல் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு, ஏ.எஸ்.ஹெச் (Aneurysm sub arachnoid hemorrhage) என்று பெயர்.
மினி ஸ்ட்ரோக்
`டி.ஐ.ஏ’ எனச் சொல்லப்படும் டிரான்சியன்ட் இஸ்கீமிக் அட்டாக்கை `மினி ஸ்ட்ரோக்’ என்கின்றனர். ஸ்ட்ரோக் வரப்போகிறது என்பதை, முன்கூட்டியே நமக்குத் தெரிவிப்பதுதான் மினி ஸ்ட்ரோக். மினி ஸ்ட்ரோக் ஏற்பட்டால், திடீரென வாய் கோணி, பேச்சுக் குழறும்; கண் ஒரு பக்கமாக மங்கலாகத் தெரியும்; சில சமயம் பார்வை பறிபோனதுபோல இருட்டாகத் தெரியும். இந்தப் பிரச்னை சில நொடிகளில், நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும்.
இவர்களுக்கு, மறுநாளோ, அடுத்த வாரமோகூட ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம். அதைப் புறக்கணித்தோம் என்றால், ரிண்ட் (RIND) எனப்படும் அடுத்த நிலை ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலைவந்தால், ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து, வாய்க் குழறல், கை, கால்கள் சரியாகிவிடும். கை, முகம், பேச்சு மூன்றும் ஒரு சேர இழுத்து கொள்ளும்போதுதான் ஸ்ட்ரோக் என்கிறோம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் மருத்துவர்கள் FAST என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
F – Face Drooping: (முகம் ஒரு பக்கமாகக் கோணுதல்) குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.
S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.
T – Time: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க எட்டு டிப்ஸ்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்.
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வேண்டும்.
மது அருந்துவதை அறவே நிறுத்தவும்.
புகைபிடிப்பதை உடனே விட்டுவிடுங்கள்.
எப்போதும் நீர்ச்சத்து தேவை, தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
உடற்பயிற்சி, சமச்சீர் உணவின் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள்வைப்பது அவசியம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் வலது மூளை பாதிக்கப்பட்டால், உடலின் இடது பக்கம் பாதிக்கப்படும், கை,கால்கள் செயல் இழக்கும். இடது மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் செயல் இழந்துபோவதுடன், பேச்சுத்திறனும், பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும் பாதிக்கப்படும். வலது பக்க மூளையைவிட இடது பக்க மூளை பாதித்தால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
நன்றி : டாக்டர் விகடன் - 16.01.2016