நட்புப்பயிர் வளர்க்கும்கல்பதரு- ஆங்கே நலம் சிறக்கும் நவராத்திரி கொலு

 

நட்புப்பயிர் வளர்க்கும்
கல்பதரு- ஆங்கே 
நலம் சிறக்கும் நவராத்திரி கொலு!" 
=========================

அன்பை நாளும் வளர்த்திடவே 
அருள்வான் ஈசன்அனுதினமே !
உறவுகள் தழைக்கும் கல்பதரு 
உலகம் வியக்கும் உறைவிடமே !
உவந்தே இணையும் உள்ளுறைவோர்
உன்னதமாய் கொலு அமைத்தாரே! 

மும்மூன்று நாட்கள் ஆண்டுதோறும்
முனைந்து நவராத்திரி கொலுவைத்தே 
முப்பாலுரைத்த வள்ளுவர்வழி ஏகியே 
மூவுலகும் மெச்ச வாழ்வாரே! 

நானிலம் தன்னில் நவயுகத்தில் 
நாளும் வளர்ந்து நலம் தரும் 
விஞ்ஞானமும் மெய்ஞானமும் 
விஞ்சிடும் அத்தன் தன்மைக்கேற்ப 
வியப்பூட்டம் சிறப்பூட்டும் கொலுவிலே.! 

விதவிதமாய் ஆன்மிகக் காட்சிகள் 
விந்தைக் காட்டும் அறிவியல் மாட்சிகள். 
காண்போர் கண் களிக்கும் -மீளாது 
காட்சியில் மனம் லயிக்கும்!

முப்பெருந் தேவியர் கொலுவிருக்க 
மும்மூர்த்திகள் அருள்மழை பொழிய 
முப்பத்து முக்கோடி தேவர்களும் 
முனிவர்களும் சித்தர்களும் அடியவரும் 
முன்வந்து கொலுவில் அமர்ந்திடுவார். !

உற்றார் உறவினர் உடன் 
உழைக்கும் மக்கள் யாவருமே 
அன்புடன் நட்பால் இணைந்தே 
அகிலம் ஆளும் நாயகியாம்
அருள்நிறை அன்னை சக்தி -அவள் 
அருளாசி வேண்டித் துதிப்பாரே! 

முன்னின்று மூத்தோர் ஆசீர்வதிக்க
முந்துறும் அன்பால் சுற்றமும்நட்பும் முகம் மலர்ந்து நல்வாழ்த்துரைக்க 
முகமும் அகமும் மகிழ்வுறுவார்! 

மங்கல நாண் குங்குமச்சிமிழ் 
மங்கலப்பொருள் அனைத்தையுமே
மங்கலமாய் மாண்புடன் வாழ்ந்திடவே 
மங்கல குங்குமமிட்டு மகிழ்ந்தளிப்பார்! 

புத்துருக்கு நெய் பட்சணமும் 
புத்தரிசி முறுக்கும் தட்டையுமே 
மூக்கு உடையாக்கடலை சுண்டலும் 
மூக்கு உடைபடும் கிண்டலுமே 
குறையாது அள்ளிக் கொடுத்திடுவார்
நிறைவாக உண்டு மகிழ்ந்திடுவீர்.!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (2-Oct-16, 6:21 pm)
பார்வை : 139

மேலே