தேவதைகளின் குரல் -கார்த்திகா

டெடிபியர் கைப்பை தோளிலும்
கைகளில் சிறிய பயணப்பை
கண்களை ஆண்ட்ராய்டு கைபேசியில்
பதித்தவாறு பேருந்தில்
வந்தமரும் சல்வார் கல்லூரிப் பெண்ணை நீங்கள் நிச்சயம்
கவனித்து இருப்பீர்கள்
கியூட் என்று விளித்திருக்கலாம்
வழி நெடுக ஓடும் மனிதர்களை
வழிவிடும் மரங்களை தன்
மஸ்காரா விழிவிரித்து
பச்சைக் கிளி ரசித்திருக்கும்
சின்னதாய் இதழ் விரித்து
டைரிமில்க் தித்திக்கையில்
உங்கள் செல்ல மகள்
நினைவில் முட்டியிருப்பாள்
காதோரம் முடி ஒதுக்கையில்
காற்று கொஞ்சம் சீண்ட
அவள் வெட்கத்தில்
குல்மொகர்கள் சிவந்ததில்
மேலும் உன்னிப்பாகி இருக்கும்
உங்கள் பார்வைகள்
கீச்சுக் குரலில் கொஞ்சியும்
கொஞ்சம் பெரியவளாய் காட்ட
நினைக்கும் அவளில் உங்கள்
சின்ன வயது தோழி ஞாபகத்தில்
சிரித்திருக்கலாம்
எப்படியிருந்தும் நீங்கள்
அவள் பேருந்தின் படியிறங்கும்போது
அடி வயிற்றில் கைவைத்த
எவனைப் பற்றியும்
நிச்சயம்
சிந்தித்திருக்க மாட்டீர்கள்...
தேவதைகளின் குரல்
கேட்பதில்லைதான்...