பல விகற்ப இன்னிசை வெண்பா வஞ்சமின்றி வானம் பொழிகின்ற தண்ணீரும்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
வஞ்சமின்றி வானம் பொழிகின்ற தண்ணீரும்
கொஞ்சம் குறைந்தாலே போதுமடா ஓராண்டு
காவிரி ஓடுகின்ற தென்னாட்டு மாநிலங்கள்
ஏறிடுவார் நீதிமன் றம்
நூறாண்டு காலம்முன் போட்டிருந்த ஒப்பந்தம்
செல்லாது என்றுசொல்லி ஓரரசு வாதிட்டு
வேறுபுது ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னாலும்
மாறுகிறார் பாதையி லே
இருதரப்பு வாதங்கள் கேட்டறிந்த நீதிமன்றம்
தண்ணீர் திறந்துவிட ஆணையிட்ட பின்னாலும்
வீண்முரண்டு செய்திட்டால் இந்நாட்டில் சட்டத்தை
பின்பற்று வாரெவ ரோ
காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து
கல்லாகி போகும்முன் கண்திறந்து பாருமைய்யா
வேளாளர் செல்லாகி மண்மீது வீழும்முன்
நல்லாட்சி நல்கிடுவா யா
காவிரி நீர்வரக் காத்திருக் கும்மக்கள்
கண்கள் சொரிகின்ற கண்ணீரைக் காணாயோ
சம்போ மகாதேவா சம்பாஆ சாகுபடி
இவ்வாண்டு அம்போவா சொல்