அவளின் நினைவில்
கடந்துபோன காதல் நினைவலைகளை கசக்கி
காயபடுத்தாமல் கயல்விழி வழியே கவர்ந்து
இதயத் துடிப்போடு இணைத்திருப்பாய் என
இன்றளவும் கனவினில் காண்கிறேன்...
நினைவிருக்கிறதா பெண்ணே...!
ஊரெங்கும் மண்வாசம் வீசி
குறைவான குளிரில் குதூகலித்த காலம்...
அதிகாலையில் பறித்த மல்லி
அந்திவரை மாறாமல் இருக்க..
பூக்காரி அடிக்கடி அள்ளி தெளிக்கும் தண்ணீராய்
தூறலை மட்டும் தெளித்துக்கொண்டிருந்தது அந்த வான்மேகம்...
கணிணிபாடம் கடினமோ... என்னவோ..!
தெருவாசல் வருந்ததொரு வாடாமல்லி... வாடியமுகத்தோடு...
வரிகளுக்காகக் காத்திருந்த நாளேடு போல
உன் வருகைக்காக காத்திருந்த வான்மேகம்
வரி வரியாய் எழுதியது...
மழைத்துளியை மையாக்கிக் கொண்டு
நங்கை உந்தன் மலர்முகம் கண்டு...
மழைத்துளிகள் உன்னை
மன்றாடிப் பங்கிட்டுக்கொண்டிருந்தன...
சில துளிகள்..
உன்னை கண்ட மறுகணமே
தரையில் விழுந்து தற்கொலை செய்துகொண்டன...
சில துளிகள்..
உன் சுவாசம் தீண்டி மோட்சம் பெற்றன...
சில துளிகள்..
உன் கார்குழலைக் கவ்விக் கடந்து போயின...
சில துளிகள்..
வெண்நிற அங்கத்தினில் தவழ்ந்து
பொன்நிற பட்டாடையில் இடம் பிடித்து மடிந்து போயின...
பட்டாடையில் வரைக்கப்பட்ட மொட்டுக்கள் எல்லாம்
சட்டென துளிர்த்து பட்டென மலர்ந்ததுவிட...
நீ பொன்நிற பட்டாடை நுனியில்
ஊஞ்சலாடிய முந்தானை கொண்டு மறைந்து கொண்டாய்...
புவியினில் மலர்ந்த மலரொன்று
நிலை தடுமாறி மீண்டும் மலர்மொட்டாய்
முகம்மூடிய விசித்திரம் அங்கே அரங்கேறியது...
தெருவோரமாய் நின்று
விசாலமாய் குடைவிரித்திருந்த ஒரு மரத்தின் அரவணைப்பில்
மருகி குறுகி நின்றுகொண்டாய்...
ஓடி ஒழிந்தது வான்நிலவோ என நினைத்து
வானில் மின்னல் வெட்டி தொலைந்து போன பொன்நிலவை...
ஒளிபாய்ச்சி உனை தேடித்தேடி
வானைக் கிழித்துப்போனது மின்னல்...
அப்போது..
மீண்டும் மலர்ந்தது உன் மலர்முகம்...
பனியில் நனைத்த ரோஜா மலரில்
பனியை மட்டும் கடத்தி போகும் தென்றலாய்...
ஒரு கருநிற கைகுட்டையால்
மழைத்துளிகளை மறைத்துவிட்டாய்...
காதலை காட்டிக்கொடுப்பதற்காகவே படைக்கப்பட்ட
தோழமைகளில் உன் தோழியும் ஒருத்தி போலும்...
உனை மட்டும் வாசித்துகொண்டிருந்த எனைப்பற்றி
உன்காதில் ஏதேதோ ஒப்பித்துவிட்டு ஒழிந்துகொண்டாள்...
காற்றில் ஆடிய நாணல்
நிதானமாய் நிலைகொள்வது போல...
நீயும் விழிநிறுத்தி மொழிமாற்றி
ஒரு பார்வையை எனக்குப் பகிர்ந்தாய்...
ஓராயிரம் மின்னல்கள் நீண்டுவந்து
என் இதயத்தை இடித்துவிட்டுப்போனது அந்நேரம்...
இதயத்தில் சிறகடித்த வண்ணத்துப்பூச்சி
அப்போது கண் இமைகளையும் பற்றி கொண்டது...
மேடுபள்ளம் பாராமல் மழைவெள்ளம் நிரம்பிவழிய
என் வரிகளோ உன் காதலைத்தேடி நிரம்பி வழிந்தது...
அரசியல் தொண்டர்களுக்கு நடுவே
சில குண்டர்கள் காணப்படுவது போல...
மற்றொரு தோழியொருத்தி குடையோடு வந்து
அதனுள் உனையும் வரச்சொல்லி வாதாடினாள்...
நீ ஓடிச்சென்று குடைக்குள் நுழைகையில்
குடைக்கம்பி ஒன்று உன்னை செல்லமாய் குட்டி வைத்து
என்னுள் நுழையாதே என எச்சரித்தது...
நீ கோபித்துக்கொண்டு முகம் சுழிக்கையில்
பரிதாபப்பட்ட அந்தக்குடை...
உன்னை குட்டிவிட்ட குற்றத்திற்காய்
எட்டு கண்களிலும் சொட்டு சொட்டாய் கண்ணீர்விட்டது...
இறைதேடி கூடுதிரும்பும் குருவிபோல
குடைக்குள் கூடி குடிபோனாய் நீ...
அந்நேரம் கடத்தபட்டது என்காதல்...
நம்மைச்சுற்றி
வானவில் அரைவளையம் அமைத்து வாழ்த்தியது...
பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் ஆசியை
நம்காதல் அன்று பெற்றிருந்தபோதும்...
கானல்நீராய் போன அந்தக் காதலைப்பற்றி
கவலைகொள்ளாமல் இருக்கமுடியமா...?