தேடுதல்
சிலந்தியின் வலைபோல
சிக்கலாய் இருந்த என் இதயக்கூட்டின் கதவினை உடைத்து..
யாவருமறியாமல் குடிவந்து குத்துவிளக்கேற்றி
நித்தம் வந்து சுத்தம் செய்து
எனை சுகமாக்கி வைத்திருந்தவள் நீ...
நான் கண்களடைத்து காணும் கனவில் புகுந்து
குழந்தை குட்டிகளோடு குடித்தனம் நடத்தியவள் நீ...
இது..
உனக்கு எழுதும் காதல் கடிதமோ..
வாடகை வசூலிக்கவேண்டி விண்ணப்பமோ இல்லை...
நீ என் வாழ்வினுள் நுழைந்ததை
நான் வாசிக்கும்.. நேசிக்கும்.. யாசிக்கும்
ஏன்..? சுவாசிக்கும் கடிதம் எனவும் கூறலாம்...
உன் முதல் கடைக்கண்பார்வை...
புரிதலுக்கு தயாராகாத எந்தன் புத்தியில் புன்னகைபூத்து
என்னைப் புரட்டிப்போட்ட ஒரு புனிதமான காலம்...
நத்தையிடம் வித்தைகளைக் கற்றதுபோல
நகரப்பேருந்து நகர்ந்துகொண்டிருந்தது...
"தெருக்கூத்தாடிகளின் வித்தையை வேடிக்கை பார்த்து
காது மறத்துப்போன கடைத்தெரு சிறுமியொருத்தி...
பாலுக்காகவோ... ஆளுக்காகவோ...
பசிக்காகவோ... ஸ்பரிசத்திற்காகவோ...
வீம்புக்காகவோ... விதிக்காகவோ... வீரியம் குறையாமல்...
அப்போது..
அவளுக்குத் தெரிந்த ஒரேமொழியான விசும்பலோடு
கதறிக்கதறி கண்ணீரை விற்றுக்கொண்டிருந்தாள்...
உனைப்போலவே ஒரு குட்டி இராட்சசி..."
கனவில்கண்ட கடவுளைப் போல கண்காட்டி காட்சிதந்ததாய்..
சட்டென்று தோகை விரித்தாடிய ஒரு வண்ணமயிலாய்...
"பால்நிலவின் பாவம் காட்டி
படுத்துறங்கும் பனித்துளியின் ஸ்பரிசம்காட்டி...
பகலை இரவாக்கி
நித்திரையின்றி நிஜத்தைக் கனவாக்கி...
புகழுக்கு அடங்காத ஒரு கடும்புயலை
மலர்முகம் கொண்டு புன்னகைவீசி
பூமிக்குள் புதைத்துவிட்டு போவதுபோல...
உன் குறிஞ்சி சிரிப்பால் வாங்கிவிட்டாய்...
அவள் விற்றுவந்த கண்ணீரை நிறுத்திவிட்டாய்...
அவள் கண்ணத்தில் தவழ்ந்து
கழுத்துவரை நீந்திவந்த நீர்துளியை..."
ஓய்ந்தது ஏன்னவோ சிறுமழலையின் அழுகுரல்
நான் உணர்ந்ததென்னவோ ஒரு பெருமழையின் புரட்சியை...
அவள்..
அந்தச் சிறுமழலை அற்புதங்களை அனுபவித்து
அடுத்த அழுகைக்கு ஆயத்தமாகும் முன்
அடுத்த அதிரடி சாகசமொன்றை அவிழ்த்துவிட்டாய்...
காற்று.,
மயிலிறகை கவனமாய் கையாண்டு
உன் கார்கூந்தல்தேடி தன்இறகை இறக்குவதுபோல்...
அவளின் சிற்றிடையை மெல்லப் பற்றி உன் மல்லிகை மடிக்குள் மறைத்துக் கொண்டாய்...
அடடா...
கார்மேகங்களுக்கிடையில் பதுங்கிய பால்நிலவாய்
அவளின் முகம் அப்போது பிரகாசித்திருந்தது...
நீ எதற்கோ ஆயத்தமாகியிருந்தாய்
அவள் எதையொ எதிர்கொள்ள ஆயத்தமானாள்...
காரியத்தின் கண்ணீர் நனைத்த மீதியை
வீரியத்தின் வியர்வையால் அவளை நனைத்திருந்தாள்...
கைகளை கைக்குட்டையாக்கி
அவளின் நெற்றியொற்றி வியர்வையை விலக்கினாய்...
வண்ணம் வற்றிப்போன செம்மண் இதழ்குவித்து
கொளுத்தி எடுத்த கோடைவெயிலின் சூட்டை...
சுளித்துவைத்த சுண்டுஇதழால்
சுகமாய் இழுத்து... சுவசத்தில் கலந்து...
நொடிப்பொழுதில்..
உன் அன்பை உருக்கி வெளிகொணர்ந்தாய்
வினொதத் தென்றலொன்றை...
குவித்த இதழ் குவித்தபடி இருக்க
குளிரூட்டினாய் குழந்தை அவளை...
செயற்கை குளிரூட்டி தெரியும்..
இந்த இயற்கை குளிரூட்டியைக் கண்ட வியப்பில் நான் உறைந்துபோனேன்...!
அப்படியொரு தென்றலின் முதல் பிரசவத்தை பருகிய
பூலோகத்தில் மலர்ந்த முதல் மழலையவள்...
உன் செயல்கள் எப்போதும் இப்படியானால்
பூவியினில் இனி மலரும் மலர்களெல்லாம் புலம்பெயர்ந்து
உன் வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி...
சிறுமியவள்..
சிரித்துச் சிரித்து...
சிலிர்த்துச் சிலிர்த்து... சின்னாபின்னமாகி...
பனிக்கட்டியாய் உறைந்து போனாள்...
இறுதியாய்..
அவளின் சிறுஉதட்டினில் மெல்லிய முத்தமிட்டு
மொத்தமாய் அவளை மூர்ச்சையாக்கினாய்...
அவளுக்கு அழுகை அன்னியமானது..
அவளின் அதரம் புன்னியமானது...
அத்தோடு விட்டாயா நீ…
அன்னநடை பயிலும் அவளை அள்ளியெடுத்து
உன் மார்பென்னும் மந்தாரக்கூட்டினுள்
குழிதோண்டி புதைத்துக்கொண்டாய்...
அவள்..,
நிஜத்தை கடந்து..
நினைவுகளை துறந்து..
நித்திரைக்குள் நீண்டு போனாள்...
அதைக்கண்ட கனத்திலே
நானும் தொலைந்துபோனேன்…
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
என்னையும் எனதான காதலையும்...
( தேடுதல் தொடரும்... )